Published : 01 Oct 2016 10:14 AM
Last Updated : 01 Oct 2016 10:14 AM
கல்லூரி வகுப்பறைக்குள் இணைப் பேராசிரியர். கலை மேடையில் கரகாட்டக் கலைஞர், நாட்டுப் புறப் பாடகர். இப்படி பன்முகத் திறமையுடன் அசத்திக்கொண்டிருக்கிறார் எம்.இ.,பட்டதாரியான மதுரை சு.மலைச்சாமி.
மதுரை சேது பொறியியல் கல்லூரியின் இணைப் பேராசிரி யரான மலைச்சாமி பள்ளிப் பருவத்திலேயே கரகக் கலையால் ஈர்க்கப்பட்டவர். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தலையில் கரக செம்பு தூக்கி, ‘தேரோடும் எங்க சீரான மதுரையிலே..’ என்ற பாடலுக்குக் கரகாட்டம் ஆடியவர். கரகாட்டக்காரன் படத்தில் ராமராஜனுக்கு ‘டூப்’ போட்ட லூர்துசாமிதான் மலைச்சாமிக்கு முதன்முதலில் கரகம் சொல்லிக் கொடுத்த ஆசான்.
சிறுவயதில் மகன் கரகம் ஆடுவதை முன்வரிசையில் அமர்ந்து ரசித்த மலைச்சாமியின் பெற்றோர், மகன் வளர வளர கரகம் ஆடுவதை ரசிக்கவில்லை. கூத்தாடியாய் போய்விடுமோ பிள்ளை என பயந்தார்கள். ஆனால், அதையெல்லாம் பொருட் படுத்தாமல் கலைமாமணி வேலு என்பவரிடம் முறைப்படி கரகம் பயின்றார் மலைச்சாமி. இவரது ஆர்வத்தைப் பார்த்து வேலு தனது நிகழ்ச்சிகளில் மலைச்சாமியையும் சலங்கை கட்டி ஆடவைத்தார்.
கரகாட்டத்தில் நாட்டமிருந்தா லும் அதற்காக படிப்பையும் விட்டுவிடாதவர், பொறியியல் படிப்பில் எம்.இ., வரை முடித்தார். இவர் படித்த கல்லூரியே இவரை இணைப் பேராசிரியராகவும் அங்கீகரித்துக் கொண்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சூரிய சக்தி குறித்த ஆய்வு மாணவராக கற்றலைத் தொடரும் மலைச்சாமி, கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 250 மேடைகளில் கரகம் ஆடி இருக்கிறார். கரகத்துடன் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடும் இவரது கலைச் சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவரை ‘கலைச்சுடர்மணி’ விருதுக்குத் தேர்வு செய்திருக்கிறது கலைப் பண்பாட்டுத் துறை.
பேராசிரியராக இருந்துகொண்டு கரகம் ஆடுவது சங்கடமாக தெரியவில்லையா? என்று கேட்டபோது, ‘‘எனக்கு எந்த சங்கடமும் இல்லை. கரகம் ஓர் அற்புதமான கலை. அதன் மகத்துவம் அறியாதவர்கள் அதை ஆபாசமாக்கிவிட்டார்கள். போதாக்குறைக்கு சினிமாவிலும் கரகத்தைக் கேவலமாக சித்தரிக்கிறார்கள். இன்றைக்கும் கரகாட்டத்தை கலை நயத்துடன் ஆடும் கலைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை அங்கீகரிக்க ஆளில்லை.
கலைமாதா ஆசி இருந்தால் யார் வேண்டுமானாலும் காலில் சலங்கை கட்டலாம். கடந்த 7 ஆண்டுகளாக நான் எனது கல்லூரியில் ஆண்டுக்கு 10 மாணவர்களுக்காவது கரகம் சொல்லிக் கொடுக்கிறேன். ஆர்வம் உள்ளவர்கள் என்னோடு கைகுலுக்குகிறார்கள். மற்றவர்களோ, நான் தூரத்தில் வரும்போதே, கரகாட்டக்காரன் படத்தின் பின்னணி இசையை வாயால் இசைத்து நையாண்டி செய்கிறார்கள்.
அதற்காக நான் கோபப் படுவதில்லை. ஏனென்றால் கரக கலையின் மீதுள்ள ஆர்வத்தில் ஒருமுறை, மட்டைக்கூத்து (இறந்த வீட்டில் ஆடுவது) கூட ஆடி இருக்கிறேன். கிராமத்துத் திருவிழாக்களுக்கு ஆடப் போகும்போது, ‘நல்லா ஆடுறா’ன்னு இளவட்டங்கள் சத்தம் போடுவார்கள். நிகழ்ச்சி நிறைவில், நான் கல்லூரி பேராசிரியர் என அறிவிக்கப்படும்போது அதே இளைஞர்கள் அதிசயித்து வாய்பிளந்து நிற்பார்கள்.
கரகாட்டம் நான் நேசிக்கும் கலை. ஆனால், என் மனைவி கவிதாவுக்கு இது பிடிக்கவில்லை. எனது பிள்ளைகள் கரகாட்டத்தைப் பார்ப்பார்கள். ஆனால், எனது பேரன் - பேத்திகள் ஏதாவது புத்தகத்தைப் படித்துத்தான் கரகக் கலையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் நீச்சல், கராத்தே, பரதம் என ஏதேதோ சொல்லித் தருகிறார்கள். அதுபோல அரசுப் பள்ளிகளில் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட கலைகளை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாம். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரிய கலைகளை எடுத்துச் செல்வதுடன் அந்தக் கலைகளை கற்றுத் தரும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளிக்க முடியும்.’’ என்றார் மலைச்சாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT