Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM
காற்றாலை மின்சாரத்தை வீணாக்காமல் இருக்க புதிய வகை ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்த காற்றாலை உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க காற்றாலை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக துணை மின் நிலையங்களில் நவீன திட்டமிடும் மீட்டர் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 7,200 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிறுவு திறன் கொண்ட காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் முதல் அக்டோபர் வரை தென் மேற்குப் பருவக்காற்று சீசனில், தினமும் 3,500 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியாகி தமிழக மின் தட்டுப்பாடு குறைக்கப்படுகிறது.
ஆனால், காற்றாலை சீசனில் தமிழக மின் துறை பல நேரங்களில் அந்த மின்சார உற்பத்தியை நேரத்துக்கு ஏற்றாற்போல் நிறுத்தி வைப்பதால், காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. காற்றாலை மின்சாரம் நிரந்தரமில்லாத மின்சாரம் என்பதால் அதிகபட்ச மின்சாரத்தை எடுக்க முடியவில்லை என்று மின் துறையினர் காற்றாலை உற்பத்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டில் மட்டும் தமிழக மின் துறை 11,168 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் பெற்றது. ஆனால், காற்று சீசன் அதிகமாக இருந்த 2013ம் ஆண்டில், 9,600 மில்லியன் யூனிட்கள் மட்டுமே காற்றாலைகளில் இருந்து வாங்கப்பட்டது. இதனால், சுமார் 3,000 மில்லியன் யூனிட் மின்சார உற்பத்தி தமிழக மின் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டதாக, காற்றாலை உற்பத்தியாளர்கள் மின் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து காற்றாலை அதிபர் ஒருவர் கூறியதாவது:
ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், ஜி.பி.ஆர்.எஸ். மீட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உரிய திட்டமிடலுடன் காற்றாலை மின்சாரம் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது. எங்களைப் பொறுத்தவரை, குறைந்த விலை கொண்ட சுற்றுச் சூழலுக்கு மாசில்லாத காற்றாலை மின்சாரத்தை தமிழக மின் வாரியம் சிறப்பாக பயன்படுத்த வேண்டுமென்று விரும்புகிறோம்.
தமிழகம் முழுவதும் காற்றாலை மின்சாரத்தை அனுப்பும் 110 துணை மின் நிலையங்களில், இந்த ஜி.பி.ஆர்.எஸ். மீட்டர் வைத்து சென்னையிலுள்ள மின் வாரிய மின் விநியோக மையத்தில், ஒருங்
கிணைந்த காற்றாலை தகவல் தொழில்நுட்ப மையம் அமைத்து கொடுப்போம். அங்கு எங்கள் சங்கத்தின் செலவில் திறமையான பொறியாளரையும் பணியமர்த்தி மின் துறைக்கு உதவத் தயாராக உள்ளோம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், காற்றாலை மின்சாரம் குறித்து திட்டமிடல் ஏற்படுத்துவது கட்டாயம் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில், புதிய தொழில்நுட்ப மீட்டர்கள் பொருத்துவதால் மின்சாரம் வீணடிக்காமல் தடுக்கப்படும் என காற்றாலை அதிபர்கள் நம்புகின்றனர்.
இதற்கிடையில், காற்றாலை மின்சாரத்தை வீணடிக்காமல் இருக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காற்றாலை உற்பத்தியாளர்கள் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT