Published : 25 Aug 2022 04:09 AM
Last Updated : 25 Aug 2022 04:09 AM
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்படும் என்று இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் கூறினார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்த உள்ளோம். சென்னை நகரில் மட்டும் 5,501 விநாயகர் சிலைகள் வைக்கப்படும்.
இந்து சமூக ஒற்றுமை, சாதி, மத வேறுபாடுகளைக் களைதல் குறித்த விழிப்புணர்வை விநாயகர் சதுர்த்தி விழா மூலம் மக்களிடம் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்து மதத்தைப் பாதுகாக்கவும், பெருமையை உலகுக்கு உணர்த்தவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மேலும், சதுர்த்தி விழாவை முன்னிட்டு 3 பெண்களுக்கு விளக்கு பூஜை, சுமங்கலிப் பூஜை, குடும்ப பூஜை நடத்தி, அவர்களுக்கு இந்து மதத்தின் பெருமைகளைப் புரியவைக்க அன்னையர் தின விழா நடத்தப்படும். சாதி வேறுபாடுகளைக் களைவதற்காக சமுதாய சமத்துவ தினமும் கொண்டாட உள்ளோம்.
அதேபோல, நர நாராயண பூஜையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு பாத பூஜைகள் செய்யப்படும். இந்த ஆண்டு `பிரிவினைவாதத்தை முறியடிப்போம், தேசிய சிந்தனையை வளர்ப்போம்' என்ற கோஷத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளோம்.
திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசு என்ற அபிப்பிராயம் மக்களிடம் நிலவுகிறது. இதை முறியடிக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வரும் 31-ம் தேதி தொடங்கும் விநாயகர் சதுர்த்தி விழா, செப். 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னையில் செப். 4-ம் தேதி விநாயகர் ஊர்வலம் நடைபெறுகிறது. திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டை, வள்ளுவர் கோட்டம் மற்றும் முத்துசாமி பாலம் ஆகிய 3 இடங்களில் இருந்து ஊர்வலம் தொடங்கி, பட்டினப்பாக்கம் கடற்கரையில் நிறைவடையும். அதிகபட்சமாக 13 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்படும்.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வி.களத்தூரில் மத ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி அதைத் தடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, அங்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகுதிருவிழா நடந்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த காவல் துறை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு முருகானந்தம் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT