Published : 24 Oct 2016 07:01 PM
Last Updated : 24 Oct 2016 07:01 PM
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். கோவையில் வனத்துறையால் பிடிக்கப்படும் காட்டுயானைகள் இறந்தாலும் சர்ச்சை; இருந்தாலும் சர்ச்சை என்ற நிலையை நேற்று குட்டியை பெற்றெடுத்த யானை உருவாக்கியுள்ளது.
கோவையில் சில மாதங்களுக்கு முன்பு மதுக்கரை பகுதிகளில் சுற்றித்திரிந்த ஆண் யானை ஒன்று விவசாயப் பயிர்களை அழித்து நாசமாக்கியதோடு, வனத்துறை ரேஞ்சர் உள்ளிட்ட சிலரை அடித்துக் கொன்று பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வந்தது. அதை மிஷன் மதுக்கரை மகாராஜ் என்ற பெயரில் மயக்க ஊசி போட்டு பிடித்து டாப்ஸ்லிப் முகாமிற்கு கொண்டு சென்றனர் கோவை மாவட்ட வனத்துறை அலுவலர்கள்.
அதற்கடுத்தநாள் இந்த யானை பிடிபட்ட இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் எட்டிமடை அருகே ரயிலில் சிக்கி ஓர் பெண் யானை பலியானது. அதையடுத்து வனத்துறையினர் முந்தின நாள் பிடித்த ஆண் யானை இதன் ஜோடி யானை. அது கூட்டத்திலிருந்து வழிகாட்டி யானையாக விளங்கியது. அதை வனத்துறையினர் பிடித்து விட்டதால்தான் இந்த கூட்டத்தோடு இருந்த இந்த பெண் யானை வழிதவறி ரயிலில் அடிபட்ட இறந்தது என்றெல்லாம் வனஉயிரின ஆர்வலர்களிடம் சர்ச்சை கிளம்பியது.
அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் டாப்ஸ்லிப் முகாமில் அடைக்கப்பட்டிருந்த மகராஜ் யானையும் இறந்தது. அது வனத்துறை மருத்துவர்கள் அதிகமான மயக்க ஊசி செலுத்தியதால்தான் இறந்தது என்று சர்ச்சைகள் கிளம்ப, அதை மறுத்தது வனத்துறை. கராலில் அடைக்கப்பட்ட நிலையில் தன்னைத்தானே கட்டையில் இடித்து இந்த ஆண் யானை இறந்ததாகவும், அது ஏறக்குறைய தற்கொலைக்கு சமம் என்றும் அவர்களின் விளக்கம் அமைந்தது. அதற்கடுத்த சில நாட்களில் மதுக்கரை பகுதியில் மீண்டும் ஒற்றையானை வட்டமிட பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.
அது மதுக்கரை மகாராஜ் யானைதான்; வனத்துறை ஏற்கெனவே பிடித்து கராலில் அடைபட்டு இறந்தது வேறு காட்டுயானை என்றே உறுதிபட பேசினர் மக்கள். அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து பெரிய தடாகம் பகுதியில் ஒரு பெண் யானை குட்டியுடன் சுற்றித்திரிந்தது. அந்தக் குட்டிக்கு வாயில் புண் ஏற்பட்டு சிகிச்சை தர வனத்துறை மருத்துவர்கள் முயற்சிக்க, தாய் யானை விடாமல் சுற்றி, சுற்றி வர, ஒரு கட்டத்தில் அந்தக் குட்டியானையும் இறந்தது.
இந்தக் குட்டியானை பன்றிகளுக்கு வைக்கும் அவுட்டு காய் வெடியை வாய் வைத்ததால்தான் இறந்தது; அதை முன்கூட்டியே கவனித்து சிகிச்சையளித்திருந்தால் வனத்துறையினர் காப்பாற்றியிருக்கலாம் என்றும் சர்ச்சைகள் கிளம்பின. அந்தக் குட்டி யானை அடக்கம் செய்யப்பட்டு சில வாரங்களில் கோவைபுதூர் பகுதியில் மீண்டும் ஒரு ஆண் யானை பயிர்களை நாசம் செய்தது. அது மதுக்கரை மகராஜ்தான்; திரும்ப வந்து விட்டது என்றெல்லாம் மக்கள் பொறுமித்தள்ள, வனத்துறையினர் அதையும் மறுத்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த 19-ம் தேதி பெரிய தடாகம் பகுதியில் ஒரு பள்ளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது பெண் யானை ஒன்று. இதற்கு 35 வயது; விஷச் செடியோ, பாலிதின் பைகளோ ஏதோ ஒவ்வாத பொருட்களை சாப்பிட்டு விட்டது. அதனால்தான் அது வயிற்று வலியால் துன்பப்படுகிறது. சாப்பிடக்கூட முடியாமல் சோர்ந்து விழுந்து விட்டது என்று வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்ததோடு, அதற்கு சிகிச்சையளிக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதையடுத்தும் எழுந்து நிற்க முடியாத அந்தப் பெண் யானையை கிரேன் பொக்ளின் மற்றும் பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானையையும் வைத்து டிரக்கில் ஏற்றி போளுவாம்பட்டி வனச்சரக சாடிவயல் முகாமிற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து மூன்று நாள் கொடுக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உணவுகளால் பெண் யானை எழுந்து நின்று எல்லோரையும் சந்தோஷப்படுத்தியது. அப்போதும் கூட வனத்துறை மருத்துவர்கள் அது நோய்வாய்ப்பட்டதற்கு வயிற்று உபாதையே காரணம் என்று திரும்ப, திரும்ப சொல்லி வந்தனர். மேலும் சில நாட்கள் வனத்துறை முகாமிலேயே அதற்கு உணவும் மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இச்சூழலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு இந்த பெண் யானை ஓர் ஆண்குட்டியை ஈன்றது. அதையடுத்து பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது. இத்தனை வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அனுபவப்பட்ட கும்கி பாகன்கள் இருந்தும் ஒரு நிறைமாத கர்ப்பிணி யானை பற்றிய அறிகுறியைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் இருந்துள்ளனர். அந்த அளவுக்குத்தானா அவர்களின் நிபுணத்துவம் என வன உயிரின ஆர்வலர்கள் சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
உடனே இது விஷயத்தில் வனத்துறை மருத்துவர்கள், 'யானைக்கு வயிற்று உபாதை என்று நாங்கள் சொன்னதன் பின்னணியில் அது கர்ப்பமாக இருக்கலாம் என்ற விஷயமும் உள்ளடங்கியே இருந்தது. அதை நாங்கள் வெளிப்படுத்தவில்லை அவ்வளவே!' என்று கருத்துத் தெரிவிக்க, 'குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல்தான் இந்த விஷயத்தில் வனத்துறை நடந்து கொள்கிறது!' என தொடர் சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து சாடிவயலில் அந்த பெண்யானை குட்டி ஈன்ற போது அருகில் இருந்து கவனித்த பாகன்களிடம் பேசியபோது, 'நேற்று ராத்திரி இந்த யானை கட்டி வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில்தான் தூங்கிக் கொண்டிருந்தோம். அது குட்டி போடும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. காலை 4.30 மணிக்கு குட்டி கத்திய சத்தம் கேட்டுத்தான் கண்விழித்தோம். பார்த்தால் அழகான குட்டியை ஈன்று இப்படி நின்று கொண்டிருக்கிறது யானை!' என்று தெரிவித்தனர். பொதுவாக ஒரு பெண் யானை ஆண் குட்டியை ஈன்றெடுப்பதற்கு 22 மாதகாலமும், பெண் குட்டியை ஈன்றெடுக்க 20 மாதங்களும் ஆகுமாம். அதன் வயிறு பெரிதாக இருக்கும். அதன் மார்புகள் பெரியதாகவும் காணப்படும். அப்படியொரு தன்மை இந்த யானைக்கு காணப்படாததால் அது கர்ப்பம் என்பதை எங்கள் அனுபவத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை!' எனத்தெரிவித்தனர்.
(கால்நடை மருத்துவர் மனோகரன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு உறுப்பினர் சலீம்)
இந்த யானைக்கு சிகிச்சை கொடுத்த கால்நடை மருத்துவர் மனோகரனிடம் பேசியபோது, 'ஏதாவது தேவையற்ற பொருட்களை உண்டிருக்கலாம். வேறு வயிற்று உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது கர்ப்பமாகவும் இருக்கலாம் என்றே முடிவு செய்து அதற்கேற்ப சிகிச்சைகளை கொடுத்தோம். ஆனால் கர்ப்பம் என்ற சந்தேகத்தை நாங்கள் மீடியாக்களிடம் வெளிப்படுத்தவில்லை. காரணம் அதை சொன்னால் அடுத்த கேள்வி எத்தனை மாதம் கர்ப்பம் என்று வரும்.
ஒரு வேளை வயிற்றில் கட்டி இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அன்றைக்கு கர்ப்பம் என்று சொன்னீர்களே என்ற கேள்வி கேட்பார்கள். அதன் காதுமடல்கள் சுருக்கம், வாய்ப்பகுதி குழிவிழுந்த தன்மை எல்லாம் வைத்து பார்க்கும் போது இந்த யானைக்கு 45 வயது முதல் 50 வரை இருக்கலாம். யானையின் பேறுகாலம் என்பது 20 முதல் 40 வயதுக்குள் இருந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும். அதற்குப் பிறகு என்றால் அதனால் நிற்க முடியாது. சோம்பி விடும். போதாக்குறைக்கு இதற்கு போதிய தீவனம் கிடைக்கவில்லை. எனவேதான் இது குழிக்குள் மயங்கி விழுந்திருக்கிறது. இன்னமும் 25 நாட்கள் இதனை முகாமில் வைத்து கண்காணித்து சிகிச்சைகள் அளிக்கப்படும்!' எனத்தெரிவித்தார்.
சாடிவயலில் குட்டி ஈன்ற பெண்யானையை பார்வையிட்டுக் கொண்டிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு உறுப்பினர் சலீம் இதுகுறித்து பேசும்போது, 'நேற்று வரை இந்த யானைக்கு 35 வயதுதான் இருக்கும் என்று வனத்துறையினர் சொல்லிக் கொண்டிருந்தனர். அது குட்டி ஈன்றவுடன் இன்று அதற்கு 45 வயது முதல் 50 வயது என்று சொல்லகிறார்கள். இப்படி இதில் நிறைய சர்ச்சைகளை சொல்லலாம். ஆனால் பள்ளத்தில் விழுந்து கிடந்து, கிரேன் வைத்துத்தூக்கப்பட்டு, லாரியில் கொண்டு வரப்பட்டு, மருந்துகள் செலுத்தப்பட்டு பல இன்னல்களை சந்தித்த பெண் யானை தற்போது குட்டி ஈன்று தாயும், சேயும் நலமுடன் இருக்கிறதே. அதற்கு வனத்துறைக்கு நன்றி சொல்லவேண்டும்!' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT