Published : 23 Jun 2014 10:43 AM
Last Updated : 23 Jun 2014 10:43 AM

மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் அமல்: தமிழகத்தை பின்பற்றி உருவான மத்திய அரசு திட்டத்தால் 60 லட்சம் பேருக்கு பயன்

தமிழகத்தில் ஏற்கெனவே மாணவி களுக்காக செயல்படுத்தப் பட்டு வந்த இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை பின் பற்றி மத்திய அரசு புதிய திட்டத்தை உருவாக்கி அனைத்து மாநிலங் களிலும் செயல்படுத்தி வருகிறது. இப்புதிய திட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவ மாணவ, மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இத்திட்டத் திற்கு வாராந்திர இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் திட்டம் என்று பெயரிட்டுள்ளது. இரும்புச் சத்து மாத்திரைகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் வழங்கப்பட்டு வந்தன. புதிய திட்டத்தின் கீழ் பள்ளிகளில் நீல நிறத்தில் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.

பாரம்பரிய உணவை மறந்தோம்:

தமிழகத்தில் அன்றாட உணவில், முருங்கைக் கீரை, கேழ்வரகு புட்டு, சப்பாத்தி, கூழ், மற்றும் வெல்லம், வேர்க்கடலை சேர்த்து தயாரிக்கப்படும் பொரி உருண்டை மாவு உள்ளிட்டவை ஓர் அங்கமாக இருந்தன. நமது மாறி வரும் உணவுப் பழக்கத்தால், மேற்கூறிய உணவுகளை மறந்தோம். இதனால் ரத்த சோகையால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வளரிளம் பருவத்தினர் இந்த நோயால் பாதிக்கப்படுவதால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி றார்கள்.

நாட்டின் எதிர்காலம்

இந்தியாவின் முக்கிய வளம் இளைஞர் சக்தி. இந்த சக்தியால் தான் அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் இந்தியாவை மதிக்கின்றன. இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பருவத்தினரில் 55.8 சதவீத பெண்களும், 30.2 சதவீத ஆண்களும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை நடத்திய 3-வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரியவந்துள் ளது. எனவே நாட்டின் வருங்கால இளைஞர்களை சக்திமிக்கவர் களாக உருவாக்கும் விதமாக மத்திய அரசு வாராந்திர இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

ரத்த சோகையால் ஏற்படும் பிரச்சனைகள்

இரும்புச் சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகைநோய் ஏற்படுகிறது. இதனால் உடல் வளர்ச்சி பாதிப்பு, உடல் சோர்வு, சுறுசுறுப்பு இல்லாமல் இருப்பது, படிப்பில் நாட்டமின்மை, தலைமுடி உதிர்தல் போன்ற பாதிப்பு களை மாணவர்கள் சந்திக்கின்றனர். பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவ தால் அவர்கள் எளிதில் ரத்த சோகை நோய்க்கு ஆளாகிறார்கள். ரத்த சோகையில் மாத விடாய் சுழற்சியின்போது அடி வயிற்றில் வலியும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

தமிழகத்தில் தொடக்கம்

இத்திட்டம் கடந்த 19-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள் ளது. இத்திட்டத் தின் கீழ் பள்ளி களில் பயிலும் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவி கள் அனைவருக்கும் இந்த மாத்திரை வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வழங்கப்படுகிறது. இதை மதிய உணவுக்குப் பிறகு மாணவ, மாணவிகள் சாப்பிட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 60 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.

திட்டத்தின் சிறப்பு

ஏற்கெனவே தமிழகத்தில் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்தி ரைகள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. பழைய திட்டத்தில், பருவமடைந்த அனைத்து மாணவிகள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வந்தன. புதிய திட்டத்தின் கீழ் தற்போது மாணவர்கள் மற்றும் மாணவிகள் அனைவருக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங் கப்படுகின்றன.

தமிழகத்தை பின்பற்றி..

மத்திய அரசு திட்டம் உருவாக் கப்பட்டதன் பின்னணி குறித்து மாநில சுகாதாரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி கூறியதாவது: கடந்த 2002-ம் ஆண்டில், நான் வேலூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநராக இருந்தபோது, வேலூர் மாவட்டம் முழுவதும் வளரிளம் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கும் திட்டம் தமிழக அரசின் ஒப்புதல் பெற்று ஒரு மாதிரி திட்டமாக செயல்படுத்தப்பட்டது.

அப்போது அங்கன்வாடி மையங்கள் மூலமாக பள்ளி செல்லா பெண்களுக்கும், பள்ளிகள் மூலமாக பள்ளி செல்லும் மாணவிகளுக்கும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. 4 மாதங்களிலேயே இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2003-ம் ஆண்டு இத்திட்டம் தமிழகம் முழு வதும் விரிவுபடுத்தப்பட்டது..

தமிழக அரசின் இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஏற்றுக்கொண்டது. பிறகு இதில் சில மாற்றங்களைச் செய்து, பள்ளியில் பயிலும் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட மாணவர் களுக்கும் இரும்புச் சத்து மாத்தி ரைகளை வழங்கும் அம்சத்தை சேர்த்து வாராந்திர இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட் டத்தை மத்திய அரசு உருவாக் கியது. இத்திட்டம் கர்நாடக மாநிலம் முழுவதும் மாதிரி திட்டமாக கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அத்திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x