Published : 14 Jan 2014 12:00 AM
Last Updated : 14 Jan 2014 12:00 AM
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்முனைத் தேர்தல் ஏற்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மும்முனைப் போட்டி மட்டுமே ஏற்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான நாள் நெருங்க, நெருங்க, கூட்டணி அமைப்பதில் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
தேமுதிக-வுக்கு கிராக்கி...
கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக-வுடன் கசப்புணர்வு ஏற்பட்டு, தனது கட்சியின் 7 எம்எல்ஏ-க்களின் ஆதரவையும் இழந்து, மூத்த உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரனும் வெளியேறியதால் தள்ளாடிக் கொண்டிருந்தது தேமுதிக. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் நம்பிக்கையுடன் போட்டியிட முடியும் என்ற நெருக்கடியில் இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத கிராக்கி தேமுதிகவுக்கு திடீரென ஏற்பட்டது.
காங்கிரஸுடன், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்று பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் பகிரங்கமாக அறிவித்தார். இதனால், தேமுதிக-வுடன், திமுக கூட்டு சேரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தேமுதிக-பாஜக-பாமக ஆகிய கட்சிகள் ஓரணியில் வரும் என்றும் கருத்து பரவியது.
இப்படிப்பட்ட சூழலில், தேமுதிக-வே சற்றும் எதிர்பாராத வகையில், அக்கட்சிக்கு உற்சாகம் ஏற்படும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி, “எங்கள் அணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி” என்று கூறினார். அதே கருத்தை கட்சி பொருளாளர் மு.க. ஸ்டாலினும் வெளியிட்டார். இதனால் திமுக-வுடன் தேமுதிக கூட்டணி சேரக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதினர்.
இதற்கிடையே, தனித்து விடப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியும் விஜயகாந்த்தை, தனது கூட்டணிக்கு ஈர்க்க முயற்சி மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாகவே மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், விஜயகாந்த்தை சந்தித்துப் பேசினார்.
எனினும், கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
கைவிட்ட காங்கிரஸை…
கடந்த மாநிலங்களவை தேர்தலில், கடைசி நேரத்தில் கைவிட்டு, திமுக-வுக்கு ஆதரவுக் கரம் நீட்டியதால், காங்கிரஸுடன் கூட்டு சேருவதை விட, திமுக அல்லது பாஜக-வுடன் கூட்டு சேருவதே மேல் என்ற கருத்து தேமுதிகவின் ஒரு பிரிவினரிடம் நிலவி வந்தது. அந்த கருத்தை எதிரொலிப்பதாகவே அக்கட்சியின் பொதுக்குழு தீர்மானமும் அமைந்திருந்தது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் தனி மரமாகும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் நான்முனை போட்டி (அதிமுக அணி, திமுக அணி, காங்கிரஸ் மற்றும் பாஜக அணி) ஏற்படும் என்றும் கருத்து நிலவியது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணா நிதியை, மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கடந்த வாரம் சந்தித்துப் பேசியது, அவ்விரு கட்சிகள் மீண்டும் தோழமையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதை உறுதிப் படுத்தியுள்ளது.
திருமாவளவன் சந்திப்பு...
இந்நிலையில், திமுக-வுடன் கூட்டணி என்று அறிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சனிக் கிழமை சந்தித்து, திமுக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக-தேமுதிக-காங்கிரஸ் மெகா கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. ஞாயிறன்று நடைபெற்ற பொங்கல் விழாவில், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதும், அதற்கு முந்தைய தினம், கட்சித் தலைவர் கருணாநிதியும் அதே கருத்தை வலியுறுத்தியிருந்ததும் இதனை சூசகமாக உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
தமிழகத்தில் அதிமுக-கம்யூனிஸ்டு, மதிமுக-பாஜக ஆகிய இரு கூட்டணிகள் ஏற்கெனவே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், இந்த மெகா கூட்டணி அமைந்துவிட்டால், தமிழகத்தில் மும்முனைப் போட்டி மட்டுமே ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுக தவிர்த்த ஏதோ ஒரு கூட்டணியில் பாமக ஐக்கியமாகிவிடக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மெகா கூட்டணி...
இதற்கிடையே, பொங்கல் விழாவின்போது ஞாயிற்றுக்கிழமை பேட்டி அளித்த விஜயகாந்த், தேர்தலுக்கு புது வியூகம் வகுப்போம் என்று வழக்கம்போல் பீடிகை போட்டுள்ளார். மறுநாளான திங்கள்கிழமையன்று (போகி) கட்சி சார்பில் பேட்டி அளித்தவர்களும் ஊழல் எதிர்ப்பை வலியுறுத்தும் மாநாடாக உளுந்தூர்பேட்டை மாநாடு அமையும் என்று கூறியிருப்பது, கிடைத்திருக்கும் அருமை யான வாய்ப்பை பயன்படுத்தி அதிக சீட் களை பெறுவதற்கு தேமுதிக சாதுரியமாக காய்களை நகர்த்துவதைத் தெளிவாகக் காட்டுகிறது.
அதேநேரத்தில், திங்களன்று பேட்டி அளித்துள்ள ஜி.கே.வாசனும், 2009-ல் அமைந்தவாறே தேசிய அளவில் மதச்சார்பற்ற கூட்டணி அமையும் என்று கூறியுள்ளார்.
இவற்றையெல்லாம் பார்க்கையில், வலுவான அதிமுக கூட்டணிக்கு எதிராக, மெகா கூட்டணி அமைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்று முடிவுக்கு வந்திருப்பதையே காட்டுகிறது.
எனினும், இவையனைத்தும், உளுந்தூர் பேட்டையில் பிப்ரவரி 2-ம் தேதி நடை பெறவுள்ள தேமுதிக மாநாட்டில், தொண்டர் களிடம் கருத்து கேட்ட பிறகு, விஜயகாந்த் வெளியிடவுள்ள அறிவிப்பை பொருத்தே அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT