Published : 25 Aug 2022 01:50 AM
Last Updated : 25 Aug 2022 01:50 AM
மதுரை: லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சதீஷ்பாபு என்பவர் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், "முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து பெரிய குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் ரூ.1,020 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
தேனி மாவட்டத்தில் கடும் மழைப்பொழிவு காரணமாக 3 போகம் விளைச்சல் நடைபெறுகிறது. இத்திட்டத்தில் 125 எம்எல்டி தண்ணீர் எடுக்கும் போது 3 போக விளைச்சல் பாதிக்கப்படும். மதுரையின் குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகவும் மதுரைக்கு குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இதனால் முல்லைப் பெரியாறு லோயர் கேம்பிலிருந்து ராட்சச குழாய்கள் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு விசாரித்தது. விசாரணையின்போதும் மனுதாரர் தரப்பில், "1886-ல் போடப்பட்ட 999 ஆண்டு ஒப்பந்தப்படி 5 மாவட்ட விவசாயத்துக்கு மட்டுமே முல்லைப் பெரியாறு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். மதுரை குடிநீர் திட்டத்தால் தேனி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் கடும் பாதிப்பை சந்திக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனுதாரர் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT