Published : 24 Aug 2022 06:07 PM
Last Updated : 24 Aug 2022 06:07 PM

“வீட்டு வரி விதிப்பில் தில்லு முல்லு” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக குற்றச்சாட்டு

மதுரை; "வீட்டு வரி விதிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தில்லு முல்லு செய்துள்ளனர். அதை விசாரிக்க வேண்டும்" என்று அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கவுன்சிலர் சொக்காயின் யாதார்த்த பேச்சும், ஆதங்கமும் மாநகராட்சி மன்ற அரங்கை சில நிமிடங்கள் அதிர வைத்தது.

மதுரை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய மேயர் இந்திராணி, "கவுன்சிலர்கள் பணியை நான் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பார்த்து வருகிறேன். உங்கள் பணி பாராட்டத்தக்கது. பாதாள சாக்கடை, குடிநீர், சாலை, சுகாதாரம் மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மக்களுக்கு நிறைவாக கிடைக்கும் இலக்குகளை விரைவில் எட்டுவோம்," என்றார். தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:

ஒன்றாம் மண்டலத் தலைவர் வாசுகி: “மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளன. அதற்கு முதல் முக்கியத்துவம் கொடுத்து சீரமைக்க வேண்டும். 3 குப்பை லாரிகள் மொத்தமே மாநகராட்சியில் உள்ளன. மண்டலத்திற்கு ஒன்றாக வழங்க வேண்டும். வார்டுகளில் சிறுசிறு வேலைகளை செய்வதற்கு கவுன்சிலர்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும். இந்த நிதி இல்லாததால் அத்தியாவசிய அவசர பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை."

அதிமுக கவுன்சிலர் ரவி : "மக்களுக்கு குடிநீர்தான் முக்கியதும். ஆனால், அந்த குடிநீரே என்னுடைய 83வது வார்டில் ஒரு தெருவுக்கு 5 மாதமாக போகவில்லை. பைப் லைனை மாற்றி கொடுங்கள் என்று தீர்மானம் போட்டு கொடுத்தோம். ஆனால், 4 மாதம் போய்விட்டது. ஒரு நட்டு போல்ட் கூட வாங்க முடியவில்லை. ஜெயித்து 6 மாதமாகிவிட்டது. ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கூட இதுவரை வேலைப் பார்க்கவில்லை, நிதியமைச்சரின் மத்திய தொகுதி வார்டுகளுக்குதான் மாநகராட்சி நிதியை வாரி வழங்குகிறார்கள்."

2வது மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: “2-வது மண்டலத்தில் மட்டும் வரி இல்லாத வருவாய் இனங்களில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ.12 கோடி நிலுவை உள்ளது. இந்த தொகையை வசூல் செய்தால் மாநகராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். தெருநாய் எண்ணிக்கை வார்டுகளில் பெருகிவிட்டது. குழந்தைகள் பள்ளிக்கு நடந்து போக முடியவில்லை. புகார் செய்தால் சுகாதாரத்துறையில் வாகனங்கள், மருத்துவர்கள் இல்லை என்கின்றனர்.”

4வது மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா: “சாக்கடை கால்வாய் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகமாகிறது. மேயர், ஆணையாளர் நேரடியாக இந்த பிரச்சனை ஆய்வு செய்ய வேண்டும். ஜெட் ரோடிங் லாரி (jet rodding lorry),கழிவு நீர் உறிஞ்சும் லாரி (suction lorry) jet rodding இல்லாததால் சாக்கடை குடிநீருடன் கலக்கிறது. அரசு ராஜாஜி மருத்துவமனை பின்புறம் உள்ள வார்டுகள் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. தற்காலிகமாவது வாடகைக்கு எடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.”

அதிமுக கவுன்சிலர் எஸ்.கவிதா: “என்னுடைய 89வது வார்டு வரி வசூல் ஊழியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி ஆணையாளரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னால் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்ளுவோம் என்று என்னையே மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்களுக்கு தவறுகளை தட்டிக்கேட்க கூட உரிமை இல்லையா?" என்றார்.

5வது மண்டலத் தலைவர் சுவிதா: “தூய்மைப் பணியாளர்கள் வருகைப் பதிவேடு சரியாக பராமரிக்கப்படுவதில்லை. தெருவிளக்குகள் எரியாததால் சமூக குற்றங்கள் அதிகரித்துவிட்டது. குடியிருப்புகளில் யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்று தெரியவில்லை.”

மாநகர முதன்மை பொறியாளர் லட்சுமணன்: “4 முறை தள்ளிப்போன தெருவிளக்கு டெண்டர் தற்போது விடப்பட்டுவிட்டது. ஒரிரு நாளில் ஒர்க் ஆர்டர் கொடுத்துவிடுவோம். படிபடியாக தெரு விளக்கு பிரச்சினைகள் சீராகவிடும்.”

அதிமுகவை சேர்ந்த சோலைராஜா: “தெருவிளக்கு ஒப்பந்தம் காலாவதியாகி 3 மாதம் கழித்து தற்போது புதியவர்களுக்கு டெண்டர் விடுகிறீர்கள். இதுவே புதிய சாலை, மார்க்கெட் மற்றுமு் கடை ஏலமாக இருந்தால் அதன் ஒப்பந்தம் முடிந்த மறுநாள் முதல் டெண்டர்விட்டு விடுவீர்கள். தெருவிளக்கு டெண்டர் இவ்வளவு தாமதம் ஆகுவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? யாருடைய அறிவுரைப்படி இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. யார் உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

வீட்டு வரி விதிப்பில் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு தில்லு முல்லு செய்துள்ளனர். மகால் அருகே பணக்காரர்கள் வீட்டிற்கு குறைவான கட்டணமும், சாதாரண குடிமகன் வீட்டிற்கு அதிகமான வரியும் விதித்துள்ளனர்."

"மம்பட்டி"யை எடுத்துட்டு வாங்க கவுன்சிலர்!

அதிமுக கவுன்சிலர் சொக்காயி கூறுகையில், "தேர்தலில் வெற்றி பெற்றால், அதை செய்வோம், இதை செய்வோம் என்றீர்கள். ஜெயித்த பிறகு எதுவும் செய்யல, வீட்டிற்குள் போய் தூங்கிவிட்டீர்களா? என்று மக்கள் போன் போட்டு கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் பாதாள சாக்கடை பிரச்சினையை கூட ஒரு கவுன்சிலரா என்னால் தீர்த்து வைக்க முடியவில்லை. ஒரு நாள் மழைக்கே தண்ணீர் தேங்குகிறது. கழிவு நீர் பொங்குகிறது. மம்பட்டியை எடுத்து வாங்க கவுன்சிலர் என்று போன் போட்டு திட்டுறாங்க. அவங்களை சமாதானப்படுத்தவே முடியவில்லை. மேயருக்கும், மாநகராட்சி ஆணையாளருக்கும் மனு எழுதி எழுதி, என் கையும், பேனாவும்தான் மிஞ்சம்" என்றார்.

உடனே மாநகராட்சி அதிகாரிகள் எழுந்து, "பைல் ரெடி பண்ணிட்டோம்” என்றனர். அதற்கு சொக்காயி, "ரெடி பண்ணி வீட்டிலையா வைத்துறீக்கீங்களா சார்?" என்றார். சொக்காயின் இந்த யாதார்த்த பேச்சும், ஆதங்கமும் மாநகராட்சி மன்ற அரங்கை சில நிமிடங்கள் அதிர வைத்தது. கட்சி பாராட்சமில்லாமல் அனைவரும் கைதட்டி அவரது கருத்தை வரவேற்றனர்.

திமுக கவுன்சிலர்கள் ‘கப் சிப்’

வழக்கமாக இதுவரை நடந்த மாநகராட்சி கூட்டங்களில் திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள்தான் அதிகமாக மாநகராட்சி மேயரிடம் அதிகம் வாக்குவாதம் செய்வார்கள். வார்டுகளில் உள்ள பிரச்சினைகளுக்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாக காரசாரமாக மோதுவார்கள். ஒரு கட்டத்தில் மேயரை அதற்கு பதில் கூற முடியாமல் திணறுவார்கள்.

அதனால், மன்ற கூட்டங்களில் மேயர் ஆதரவு திமுக கவுன்சிலர்களுக்கும், மற்ற திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கூட வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் மேயர் தரப்பினர் நிதியமைச்சர் மூலமாக மாநகராட்சிக்கு எதிராக பேசும் திமுக கவுன்சிலர்களை பற்றி கட்சி மேலிடத்திற்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அமைதியாக இருந்தனர். மண்டலத் தலைவர்கள் குறைகளை கூட சாதாரமாக கூறி கடந்து சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x