Published : 24 Aug 2022 04:29 PM
Last Updated : 24 Aug 2022 04:29 PM

“இதுதான் சட்டம் - ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” - பட்டியலுடன் முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்

சென்னை: “தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. சட்டம் - ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா?” என்று சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "இந்த திமுக ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கடந்த 15 மாதங்களில் நான் பலமுறை எடுத்துக் கூறியுள்ளேன். ஆனால், குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த முதல்வர் ஆர்வமின்றி, விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் கொலைக் களமாக
மாறி வருவது கண்டு மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல் துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது.

கடந்த 36 மணி நேரத்தில் 15 படுகொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்று செய்திகள் வருகின்றன. இது, மக்களை குலை நடுங்கச் செய்துள்ளது. இந்தக் கொலைகள் அனைத்தும் ஏதோ எதிர்பாராதவிதமாக நடந்ததாகத் தெரியவில்லை. முன்விரோதம் காரணமாகவும், திட்டமிட்டும் இக்கொலைகள் நடந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட ஒருசிலர் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று புகார் கொடுத்தும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

> சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிஷேக், நண்பர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி கோயிலுக்கு பாதயாத்திரையாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்த போது அவரை, இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.

> திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே தங்கராஜ் மற்றும் உதயகுமார்என்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் தங்கராஜை, உதயகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் உதயகுமாரை தாக்கியதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

> கோவில்பட்டி அருகே, ஊராட்சி மன்றத் தலைவர் பொன்ராஜ் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

> விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியில் மரிய பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

> நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் ஃபைனான்சியர் மனோகரன் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

> மதுரை, S.S. காலனி மேலத் தெருவைச் சேர்ந்த ஐயனார் என்ற மயான காவலாளி சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

> வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வணிக வளாகத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அபனி சரணியா என்பவர் கொடூரமான முறையில் வெட்டப்பட்ட சம்பவத்தில் உயிருக்குப் போராடி வருகிறார்.

> கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கட்டடத் தொழிலாளி சின்னப்பா என்பவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

> காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலத்தில் இருவரும், கள்ளக்குறிச்சியில் ஒருவரும் என்று, மேலும் மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, கீழ்க்கண்ட கொலைச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

  • மயிலாடுதுறையில் கண்ணன் என்பவர் வெட்டிக் கொலை;
  • பெரம்பலூரில் சுரேஷ் என்பவர் வெட்டிக் கொலை;
  • வேதாரண்யத்தில் ரத்தினசபாபதி என்பவர் அடித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலியில் ராஜா என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
  • சிவகாசியில் சரவணகுமார் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
  • கிருஷ்ணகிரியில் முருகேசன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஆக, கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

சட்டம்-ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? இதன் காரணமாக, மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவங்களுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழகக் காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு ஈடு இணையாக பேசப்பட்ட காலம் மாறி, இன்று சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல், கையறு நிலையில் செய்வதறியாது திறமையற்ற காவல் துறையாக மாறி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இனியாவது இந்த திமுக அரசு விழித்துக்கொண்டு, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x