Published : 24 Aug 2022 02:41 PM
Last Updated : 24 Aug 2022 02:41 PM
புதுச்சேரி: சிவப்பு ரேஷன் அட்டை விவகாரத்தில் புதுச்சேரி சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது சுயேட்சை எம்எல்ஏ சிவா, "காரைக்காலில் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. எந்த பணியும் நடக்கவில்லை. அதே நேரத்தில் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டை அதிகமாக தரப்பட்டுள்ளது. குறிப்பாக, துறை அமைச்சரின் தொகுதியில் அதிகளவு ரேஷன் கார்டுகள் தந்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு அமைச்சர் சாய் சரவணக்குமார், "ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க பணியாளர் துறையிடம் தெரிவித்துள்ளோம். புதுச்சேரியில் 11,533 ரேஷன் கார்டுகளை சிவப்பு ரேஷன் அட்டைகளாக மாற்றியுள்ளோம். காரைக்காலில் 163 சிவப்பு ரேஷன் அட்டைகள் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.
அதற்கு சுயேட்சை எம்எல்ஏ சிவா, "அமைச்சர் தொகுதியில் எத்தனை கார்டுகள், சிவப்பு ரேஷன் கார்டாக மாற்றி தரப்பட்டுள்ளது?" என்று கேட்டார்.
இதையடுத்து திமுக எம்எல்ஏ நாஜிம், பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ், சுயேட்சை எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ்குமார் உட்பட பலரும் குடிமைப்பொருள் வழங்கல் துறை செயல்பாடு மோசமாக உள்ளதாகவும், அங்குள்ள அதிகாரியை மாற்ற வேண்டும். அவர்கள் செயல்படுவதில்லை என்று குற்றம்சாட்டினர்.
இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, "அதிக இடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப உள்ளோம். இளநிலை எழுத்தர்கள், மேல்நிலை எழுத்தர்கள் தலா 185 பேரும், உதவியாளர்கள் 600 பேரும் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அப்போது ஆட்கள் பற்றாக்குறை நீங்கி பணிகள் விரைவாக நடக்கும். காரைக்காலுக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் அதிகாரிகள் மாற்றமும் நடக்கும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT