Last Updated : 24 Aug, 2022 01:55 PM

6  

Published : 24 Aug 2022 01:55 PM
Last Updated : 24 Aug 2022 01:55 PM

“இனமானம், தன்மானம் இல்லாதவர்களே திமுக அரசை விமர்சிக்கின்றனர்” - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கோவையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின். | படம்: ஜெ.மனோகரன்.

கோவை: “அனைவரையும் அரவணைத்து அவர்களுக்காக நன்மை செய்யக்கூடிய அரசு திமுக அரசு” என கோவையில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈச்சனாரியில் இன்று (ஆக.24) நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.589.24 கோடி மதிப்பில் 1 லட்சத்து 07 ஆயிரத்து 410 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிந்த திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ''தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து இந்த 15 மாதங்களில் இந்த கோவை மாவட்டத்துக்கு ஐந்தாவது முறை நான் வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்தின் மீதும் இந்த மாவட்டத்து மக்கள் மீதும் நான் வைத்திருக்கக்கூடிய அன்பின் அடையாளம் இது. இந்த விழாவை அரசு விழா என்று சொல்வதை விட கோவை மாநாடு என சொல்லக்கூடிய வகையில் சிறப்பாக நடைபெற்று உள்ளது.

திமுக ஆட்சியின் மீது இந்த மாவட்டத்து மக்கள் எத்தகைய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த கோவை மாநாடு சாட்சியாக அமைந்துள்ளது. இன்னும் திறமையாக சொல்ல வேண்டும் என்றால் எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்களின் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சியின் மூலமாக அறிந்து கொள்கிறேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வது போன்ற கடந்த நவம்பர் மாதம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவில் நான் கலந்து கொண்டேன். அதற்குள் இரண்டாவது நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். அவரை பொறுத்தவரையில் தனக்கென ஓர் இலக்கை வைத்துக்கொண்டு வென்று காட்டி விளங்கிக் கொண்டிருக்கிறார்.

கோவையில் இத்தகைய பிரம்மாண்டமான விழா நடப்பது பொருத்தமானது. ஏனென்றால் கோவை என்றாலே பிரம்மாண்டம் தானே. தென்னிந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் இந்த கோவை. பெரு தொழில் மட்டுமல்ல சிறு, குரு நடுத்தர தொழில் அதிகம் நிறைந்த நகரம் என்ற கோவை. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே ஏற்றுமதி இறக்குமதி குறியீடுகளை வளமாக வழங்கக்கூடிய மாவட்டமாக இந்த கோவை மாவட்டம் அமைந்துள்ளது.

கோவையில் இன்று நடந்த விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.

வியந்து செல்லத்துக்கு வழியில் கோவை மாவட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறது. விசைத்தறிகள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்புகள் தயாரிப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்பு, நகை தயாரிப்பு நிறுவனங்கள், தென்னை நார் சார்ந்த தொழில்கள், உணவு பதப்படுத்தக் கூடிய தொழில்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த அளவிற்கு தொழில்களை வழங்கிக் கொண்டிருக்கிற மாவட்டமாக கோவை மாவட்டம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, முடிவு பெற்றுள்ள பணிகளை திறந்து வைப்பது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என மூன்று திட்டங்களோடு அரசு விழாக்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் இந்த கோவை மாவட்டத்தில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் ஒரு லட்சத்தும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அரசு மக்களுக்கான அரசாக உள்ளது. பல சாதனைகளை செய்து கொண்டிருக்கிறது. சிலர் பெயருக்கு சில உதவிகளை செய்துவிட்டு கணக்கு காட்டுவார்கள். நாங்கள் கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளை செய்வது காட்டுகிறோம். அது தான் திமுக அரசு.

உலக அளவில் கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல வளர்ச்சிகளை இந்த அரசு வைத்துள்ளது. கோவை மத்திய சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட உள்ளது. அந்த இடத்திலேயே செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. கோவை மக்களின் குடிநீரை தேவையை தீர்ப்பதற்காக சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் திறக்க கேரளா முதல்வருக்கு கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன். இதனை அடுத்து உடனடியாக கேரளா அரசால் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நாட்டிலேயே அதிக முதலீடுகளை எடுத்து அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி கடந்த ஒராண்டு காலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அண்மையில் டெல்லி சென்றேன் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவரை சந்திக்க அவர்களை சந்தித்து வாழ்த்துகள் சொல்ல போனேன். அப்போது அவர்கள் தமிழகத்தின் வளர்ச்சியைப் பற்றி கேட்டார்கள். ஒரு உயர்ந்த கருத்து பரவலாக உள்ளது. நான் அதை உணர்ந்தேன். ஒரு நாளிலே ஒரு மாதத்திலே இது பெற்றதல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞரின் திட்டங்கள் வகுத்து தந்த பாதையிலே கழக ஆட்சி செல்வதால் பெற்றிருக்கக் கூடிய பாராட்டு ஆகும்.

தமிழக மக்களின் பாதை இனிமையாக இருக்க வேண்டும். அதற்காக தான் பாடுபடுகிறது கழக ஆட்சி. எந்த அளவிலும் மாறுபாடு இருக்காது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு மாநில அரசுகளும் தமிழ்நாட்டின் திட்டங்களை உன்னிப்பாக கவனித்து தங்களுடைய மாநிலத்தில் இதை பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இங்கே இருக்கக்கூடிய சிலரால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை. பொத்தாம் பொதுவாக எந்த வாக்குறுதியும் திமுக ஆட்சியை நிறைவேற்றவில்லை என சிலர் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மத்திய அரசின் ஊதியத்துக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.

உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ள, புரிந்துகொள்ள மனமில்லாமல் பேட்டி அளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நான் எப்போதும் முக்கியம் தருவதில்லை. தன்மானம் இல்லாதவர்களிடம் திமுக ஆட்சி நல்ல பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தன்மானம், இனமானம் இல்லாதவர்கள் திமுக அரசை விமர்சிகின்றனர்.

அனைவரையும் அரவணைத்து அவர்களுக்காக நன்மை செய்யக்கூடிய அரசு திமுக அரசு. பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் பழங்குடியின மக்களுக்காக அமைந்துள்ள அரசு, சிறுபான்மை சமூகம் எந்த சூழ்நிலையிலும் சிதைந்து விடக்கூடாது என்கிற சகோதர மணம் கொண்ட அரசு, திமுக அரசு அனைவருக்கும் ஆன அரசாக செயல்பட்டுகிறோம்.

கோவைக்கு வருவதற்கு முன்பாக அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதிவிட்டு தான் கோவைக்கு வந்தேன்.உங்கள் தொகுதியின் முதலமைச்சர் என்ற திட்டத்தில் 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பயணத்தை நான் தொடங்கினேன். அங்கு அனைத்து தொகுதி மக்களிடமும் கோரிக்கை மனுக்களை பெற்றேன். ஆட்சிக்கு வந்ததும் அதை நிறைவேற்றுவதாக நான் சொன்னேன்.

பொறுப்பேற்றதும் அதற்கென தனித்துறை உருவாக்கி 100 நாட்களில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 100 நாட்களுடன் இத்திட்டம் முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையும் கவனிக்கப்படும். அதற்கான கடிதத்தை தான் அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் நான் அனுப்பி உள்ளேன்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர் தொகுதிக்கு வேண்டிய கோரிக்கை வர வேண்டிய பொறுப்பு உள்ளது. அந்தந்த தொகுதிக்கு உட்பட்டுள்ள பகுதியில் மக்களுக்கு தேவையான நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள, நீண்ட காலமாக செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை கவனித்து செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி திட்டம் ஆகும் இது. விமர்சனங்களால் வளர்ந்தவன் நான். அடக்குமுறைகளை மீறி வளர்ந்தவன் நான். யாராவது என்னை எதிர்த்தால் தான் நான் மீண்டும் மீண்டும் வளருவேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்க யாராவது முயற்சித்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்.

ஓர் ஆண்டிலேயே இவ்வளவு திட்டம் என்றால் ஐந்து வருடத்தில் அளப்பரிய திட்டங்களை நிறைவேற்றி இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்குகிறோம். அது தான் எங்களது லட்சியம். அதை அறிவிக்கக்கூடிய மாநாடு தான் இந்த மாநாடு. இது உங்களுக்கான அரசு. உறுதியாக கோரிக்கை வையுங்கள் உறுதியாக நிறைவேற்றித் தருகிறோம். நீங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும்.

தங்கள் கட்சியில் இருக்கும் பிரச்சினையை தீர்க்க இயலாதவர்கள் , அதை மறைக்க திமுக அரசை குறை கூறுகின்றனர்'' என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x