Published : 24 Aug 2022 11:01 AM
Last Updated : 24 Aug 2022 11:01 AM
விழுப்புரம்: "நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை (ஆக.25) நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (ஆக.25) முதல் தொடங்குவதாக இருந்தது. நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வராததால், தேர்வு முடிவைப் பொருத்து கலந்தாய்வுக்கான தேதி நிர்ணயிக்கப்படவிருக்கிற காரணத்தால், நாளை நடைபெறுவதாக இருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த பொது கலந்தாய்வு ஆரம்பிக்கப்படும். இந்த கல்விக் கொள்கையில் மத்திய அரசின் நிலைப்பாட்டை பொருத்திருக்கிற காரணத்தால், இந்த தொல்லைகள் எல்லாம் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போது சிபிஎஸ்இ முடிவுகள் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால், ஏற்கெனவே கொடுத்திருந்த கால அவகாசத்திற்கு பின் 5 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தோம்.
தற்போதும் நீட் தேர்வு முடிவுகள் முதலில் வரும் என்று நினைத்தோம். 21-ம் தேதி முடிவுகள் வரும் என்று கூறினார்கள், ஆனால் இன்னும் வெளியிடமால் காலம் தாழ்த்தப்படுகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியானால், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பலர் அங்கு சென்றுவிடுவார்கள், அதனால்தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு பல்வேறு இடங்கள் காலியாக இருந்தன" என்று அவர் கூறினார்.
முன்னதாக, பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதியன்று நடந்தது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆக.25-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT