Published : 13 Oct 2016 02:29 PM
Last Updated : 13 Oct 2016 02:29 PM
வத்தலகுண்டு புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வருவதால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாக னங்கள் வத்தலகுண்டு நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தநிலைக்கு விடிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலைகளின் இளவரசியாக விளங்கும் சுற்றுலா இடமான கொடைக்கானலுக்கு செல்ல திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரை கடந்துதான் செல்லவேண்டும். தமிழகத்தின் தென்பகுதி, வடபகுதி ஊர்களில் இருந்து சீசன் நேரங்கள் மற்றும் ஆண்டு முழுவதும் கொடைக் கானலுக்கு அதிகளவில் பெரும்பாலான வாகனங்கள் சென்றுவருவதால் வத்தலகுண்டு நகரில் போக்குவரத்து நெரிசல் என்பது தினமும் ஏற்படும் நிகழ்வாக இருந்துவருகிறது. கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் வத்தலகுண்டு நகரில் ஆக்கிரமிப்புகளுக்கும் நடுவே உள்ள குறுகலான சாலையில் சென்று நகரை கடக்கவேண்டியதுள்ளது. சீசன் நேரங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் வத்தலகுண்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சம்பவங்களும் நடந்ததுண்டு.
சுற்றுலாபயணிகளின் வசதியை கருத்தில் கொண்டும், வத்தல குண்டு நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் விதமாக புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நீட்டி ப்பாக திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. திண்டுக்கல்- திருச்சி நான்குவழிச் சாலையாக இருந்தபோதும், திண்டுக்கல்- குமுளி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்ட இருவழிச்சாலையாகவே அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வத்தலகுண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, வீரபாண்டி, சின்னமனூர் ஆகிய முக்கிய ஊர்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் தேவதானப்பட்டி, வீரபாண்டி ஆகிய ஊர்களில் புறவழிச்சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் வத்தலகுண்டு புறவழிச்சாலைத் திட்டம் நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஆமைவேகத்தில் பணிகள் நடந்துவந்தன. இந்நிலையில் வத்தலகுண்டு புறவழிச்சாலை பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தற்போது முடிவறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து செம்பட்டி- வத்தலகுண்டு இடையே சுங்ககட்டணம் வசூலிக்க ‘டோல்கேட்’ அமைக்கும் பணியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: டெல்லியில் இருந்து வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயரதிகாரிகள் வத்தலகுண்டு புறவழிச்சாலை பணியை ஆய்வு செய்துவிட்டுசென்றனர். இவர்கள் கூறிச்சென்ற புறவழிச்சாலையில் எச்சரிக்கை பலகை வைக்கும் பணிகள் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. இந்த பணிகள் சில தினங்களில் முடிவுற்றுவிடும். இதையடுத்து நவம்பர் முதல்வாரத்தில் வத்தலகுண்டு புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் வத்தலகுண்டு நகரை கடக்கும் சிரமம் இனி இருக்காது. வத்தலகுண்டு புறவழிச்சாலை பணிகள் முடிவுற்ற நிலையில் அடுத்ததாக பெரியகுளம் புறவழிச் சாலை பணியில் கவனம் செலுத்த உள்ளோம். அங்கு பணிகள் விரைவுபடுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT