Published : 18 Oct 2016 01:03 PM
Last Updated : 18 Oct 2016 01:03 PM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசலாற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நகரில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதால், ஆற்றை மாசுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள்கோயில் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றிலிருந்து அரசலாறு பிரிகிறது. இந்த ஆறு கும்பகோணம் வழியாகப் பயணித்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சென்றடைகிறது.
இந்த ஆறு மூலம் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், குடிநீர் ஆதாரமாக நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குப் பயன்பட்டு வருகிறது.
கும்பகோணம் நகரின் தென்பகுதியில் அரசலாறு ஓடுவதால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நாள்தோறும் இந்த ஆற்றில் குளித்து, துணிகளைத் துவைத்து வருகின்றனர். கும்பகோணத்துக்கும் அன்னலக்ரஹாரத்துக்கும் இடையே இந்த ஆறு ஓடுகிறது. ஆற்றின் வடக்கு கரையில் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
மகளிர் கல்லூரி அருகே உள்ள அரசலாறு பாலத்தில் கும்பகோணம், அண்ணலக்ரஹாரம் பகுதியில் உள்ள கோழி, ஆடு இறைச்சிக் கடைகளில் இருந்து அவற்றின் கழிவுகளைக் கொண்டுவந்து தண்ணீரில் கொட்டுகின்றனர். ஒரு சிலர் ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள கரையில் கொட்டுகின்றனர்.
ஏற்கெனவே அரசலாற்றின் வடக்கு கரையில் குப்பைகளையும், கழிவுகளை கொட்டியதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு தடுப்புச் சுவர் கட்டப்பட்டது. ஆனாலும், அதையும் மீறி தற்போது ஆற்றுப் பாலத்தில் நின்றவாறே கழிவுகளைக் கொட்டி ஆற்று நீரை மாசுபடுத்தி வருகின்றனர்.
குறிப்பாக நாள்தோறும் கழிவுகள் கொட்டப்படும் பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலான நேரத்தில், இப்பகுதியில் ஏராளமான நாய்கள் ஆற்றின் கரையைச் சுற்றி வருகின்றன. கழிவுகளை உண்பதுடன், அவற்றைத் தூக்கிக் கொண்டு சாலையிலும், அருகே வீடுகள் உள்ள பகுதியிலும் நாய்கள் போட்டுவிட்டுச் செல்வதால், துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல, குறிப்பிட்ட இந்த நேரத்தில் ஆற்றில் நூற்றுக்கணக்கான கழுகுகள் தினமும் வட்டமிடுகின்றன. ஆற்றில் மிதக்கும் இறைச்சிக் கழிவுகளை அவை தூக்கிச் சென்று மகளிர் கல்லூரியில் உள்ள மரங்களில் வைத்து உண்ணுகின்றன. அப்போது, இறைச்சிக் கழிவுகள் கீழே விழுவதால் மகளிர் கல்லூரி வளாகத்திலும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், இறைச்சிக் கழிவுகளை கழுகுகள் தூக்கிச் செல்லும்போது அவை, சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுகிறது.
இதுகுறித்து, அண்ணலக்ர ஹாரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் கூறியபோது, “கும்பகோணம் வழியாகச் செல்லும் இந்த அரசலாறு தொடர்ந்து பல்வேறு ஊர்களைக் கடந்து காரைக்காலை அடைகிறது. பல இடங்களில் இதனை புனித நதியாக பொதுமக்கள் கொண்டாடிவரும் நேரத்தில், இந்த ஆற்றில் பகல் நேரத்தில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி தண்ணீரையும் சுற்றுப்புறத்தையும் மாசுபடுத்துகின்றனர்.
இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படும் மதிய நேரத்தில், இங்கு 20-க்கும் மேற்பட்ட நாய்களும், ஏராளமான கழுகுகளும் ஆற்றின் கரையைச் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்துடனேயே அப்பகுதியைக் கடந்து செல்கின்றனர்.
அரசலாற்றை மாசுபடுத்துவ தைத் தடுத்து சுற்றுப்புறத்தை சுகாதாரத்துடன் பராமரிக்க பொதுப்பணித் துறையும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT