Published : 24 Aug 2022 05:31 AM
Last Updated : 24 Aug 2022 05:31 AM

போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி - இன்று மீண்டும் நடப்பதாக அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை, துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், போக்குவரத்து துறைசெயலர் கே.கோபால், நிதித் துறைகூடுதல் செயலர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர்தனி இணை ஆணையர் லட்சுமிகாந்தன், மாநகர போக்குவரத்துகழக மேலாண் இயக்குநர் அன்புஆபிரகாம் உள்ளிட்ட அதிகாரிகளும், போக்குவரத்து கழகங்களில்செயல்படும் 66 தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். காலை 11 மணிஅளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணி வரை நீடித்தது.

இதற்கிடையே, அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் தனித்தனியாகவும், பின்னர் இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘ஏற்கெனவே உள்ளபடி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் எனும் நடைமுறையை மாற்றக் கூடாது, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன. ஆனால், ஊதிய ஒப்பந்தம் அமைக்கும் காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

ஒப்பந்த கால அளவில் முடிவு எட்டப்படாத நிலையில், மீண்டும் அரசிடம் ஆலோசிப்பதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பேச்சுவார்த்தை மீண்டும் இன்று (ஆக.24) காலை 11 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:

தொமுச பேரவை பொதுச் செயலாளர் எம்.சண்முகம் எம்.பி.: பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் அ.சவுந்தரராஜன்: ஒப்பந்த காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து, அரசுடன் ஆலோசிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தலைவர் தாடி ம.ராசு: பேச்சுவார்த்தை என்றால் வெளிப்படைத் தன்மையுடன் நடக்க வேண்டும். சில சங்கங்களுடன் தனித்தனியாக அமைச்சர் பேசினார். அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இறுதியாக எடுக்கப்படும் முடிவு குறித்து எங்களிடம் கேட்கவில்லை. விவாதங்களை எதிர்கொள்ள மறுக்கின்றனர். எந்த தகவலையும் பொதுவில் தெரிவிப்பது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x