Published : 14 Oct 2016 09:10 AM
Last Updated : 14 Oct 2016 09:10 AM
சென்னையில் குடிநீர் லாரிகள் இயக்கத்துக்கு விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படாததால் சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்து வரு கின்றன.
சென்னையில் பெருகி வரும் மக்கள்தொகையால், அவர்களின் குடிநீர் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சென்னையில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 83 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில் தினமும் 3 கோடியே 40 லட்சம் லிட்டர் குடிநீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்படுகிறது. இதற்காக 500 லாரிகள் மூலம் தினமும் 4 ஆயிரம் நடைகள் இயக்கப்படுகின்றன. இதுமட்டு மல்லாமல், 750 தனியார் குடிநீர் லாரிகளும் தினமும் இயக்கப் படுகின்றன. இவை பகல் நேரத்தில் இயக்கப்படுவதால், சாலை விபத்துகளும், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுவதாக பொது மக்கள் மத்தியில் குற்றம்சாட்டப் படுகிறது.
இது தொடர்பாக வியாசர் பாடியைச் சேர்ந்த சிவஞானம் கூறும்போது, “சரக்கு லாரிகளை இயக்குவது போன்று, குடிநீர் லாரிகளை இயக்க முடியாது. அதற்கென அனுபவம் பெற்றி ருந்தால் மட்டுமே லாரிகளை இயக்க முடியும். இந்த லாரிகள் பகல் நேரத்தில் இயக்கப் படுவதால், ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி யுள்ள சென்னை மாநகர சாலைகள் மேலும் நெரிசலுக்கு உள்ளா கின்றன. மேலும் சாலை விபத்து களும் அதிகரிக்கின்றன. இந்த லாரி ஓட்டுநர்களுக்கு என்று தனி விதிமுறைகள் எதுவும் வகுக் கப்படவில்லை. தண்ணீர் லாரி ஓட்டுநர்களுக்குப் பயிற்சி, லாரியை இரவில் இயக்குவது போன்ற விதிகளை உருவாக்க வேண்டும். வட்டார போக்கு வரத்து அலுவலகங்கள் குடிநீர் லாரிகளுக்கு என சில நிபந்தனை களை உருவாக்கி, அதன் அடிப் படையில் தகுதிச் சான்று (எஃப்சி) வழங்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறிய தாவது:
சென்னை குடிநீர் வாரியம், ஒப்பந்த குடிநீர் லாரிகள் மூல மாகத்தான் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. அவை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான லாரிகள் கிடையாது. அந்த லாரிகளை ஒப்பந்தம் செய்யும்போது, லாரி ஓட்டுநர் 21 வயதுக்கு மேல், 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நல்ல உடல் திறன் மற்றும் பார்வைத் திறன் உடையவராக இருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் வழங்கப்பட்ட, காலாவதியாகாத கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதுடன், 3 ஆண்டுகள் கனரக லாரிகளை இயக்கிய அனுபவமும் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு முன்பு எந்த விபத்தையும் ஏற்படுத்தியிருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளைப் பின் பற்றுகிறோம். இது வழக்கமான நிபந்தனைகள்தான். குடிநீர் லாரியை இயக்குவதற்கென தனி நிபந்தனைகள், அறிவுரைகள் எதுவும் இல்லை.
மேலும், குப்பை லாரிகள் போன்று குடிநீர் லாரிகளை இரவில் இயக்க முடியாது. பொது மக்களுக்குத் தேவை இருக்கும் போது, போன் செய்தால், உடன டியாக விநியோகிக்க வேண்டி யிருக்கும். லாரிகளில் குடிநீர் வழங்கக் கோரி வரும் தொலை பேசி அழைப்புகள் அனைத்தும் பகலில்தான் வருகின்றன. இரவில் குடிநீர் பிடிக்க பொது மக்களும் விரும்புவதில்லை. அதனால் இரவில் குடிநீர் விநியோகிப் பதில்லை” என்றார்.
குடிநீர் லாரி ஓட்டுநருக்கான சிறப்பு விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா என்று போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாங்கள் இலகுரக, கனரக லாரி உரிமங்களை வழங்கு கிறோம். குடிநீர் லாரி, கழிவுநீர் லாரி, பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் லாரிகள், சமையல் எண்ணெய் ஏற்றிச் செல்லும் லாரிகள் அனைத்தும் கனரக வாக னங்கள் பட்டியலில் வருகின்றன. அதற்கென தனி உரிமம் எதுவும் வழங்கப்படுவதில்லை. அவற்றை இயக்க கனரக உரிமமே போது மானது” என்றார்.
குடிநீர் லாரியால் அதிக விபத்துகள் ஏற்படுவது ஏன்?
சென்னை தனியார் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தினர் கூறும்போது, “குடிநீர் வாரிய ஒப்பந்த லாரிகள், பல இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டியிருக்கும். குறைவான தண்ணீர் கொண்ட டேங்க்களுடன் செல்லும்போது மெதுவாக பிரேக் பிடித்தால் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால், உடனடியாக பிரேக் பிடிக்க நேர்ந்தால், டேங்க்கில் உள்ள நீர் ததும்புவதால் ஏற்படும் அழுத்தத்தில் லாரிகளை சில அடிகள் முன்னோக்கி செல்ல வைக்கும். ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் லாரி இருக்காது. இதனால் விபத்து ஏற்படுகிறது.
கடந்த 2004-ல் டேங்கர் லாரிகளின் முன், பின் சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துகள் அதிகமாக நடைபெற்றன. அப்போது தமிழக அரசு உத்தரவின் பேரில், பேருந்தை சுற்றி தகடு அடித்திருப்பது போன்று, குடிநீர் லாரிகளுக்கு தகடுகள் அடிக்கப்பட்டது. அது இப்போதும் நடைமுறையில் உள்ளது. அதனால் விபத்துகள் குறைந்தன. இப்போது குறைவான நீரை ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. லாரியை மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் இயக்குவதன் மூலம் விபத்தை தவிர்க்கலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT