Published : 27 Oct 2016 01:08 PM
Last Updated : 27 Oct 2016 01:08 PM
இதுவரை 176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேட்டூரை சேர்ந்தவர் தேர்தல் மன்னன் டாக்டர் கே.பத்மராஜன். சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் முக்கிய தலைவர்களை எதிர்த்து போட்டியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுவரை 176 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து லக்னோ, நரசிம்மராவை எதிர்த்து நந்தியால், பிரதமர் மோடியை எதிர்த்து வதோரா மக்க ளவைத் தொகுதியிலும், முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து பர்கூர், ஆண்டிபட்டி, ஆர்.கே.நகரிலும், முன்னாள் முதல்வர் கருணாநிதியை எதிர்த்து சேப்பாக்கம், மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியுற்றார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அசாம் மாநிலத் திலிருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து பத்மராஜனும் போட்டியிட்டார்.
கடந்த 1996-ல் பொதுத் தேர்தலில் 5 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து தேர்தலில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. நந்தியால் தொகுதியில் நரசிம்மராவை எதிர்த்து போட்டியிட்டபோது, இவரை சிலர் கடத்திச் சென்றதால் நாடு முழுவதும் அறியப்பட்டார்.
தற்போது நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட பத்மராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
177-வது முறையாக தேர்தல் களத்தில் குதித்துள்ள பத்மராஜன் கூறியதாவது:
தோல்வியடைவதற்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறேன். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. தோல்வியில் சாதனை புரிய வேண்டும்.
இதுவரை 176 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். இதுவும் ஒருவகையில் சாதனை யாகும். தோல்வியில் தான் அதிகம் கற்றுக்கொள்ள முடியும். வெற்றி அதிக நாள் நீடிக்காது. எனது சாதனையை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யக்கோரி கடிதம் அனுப் பியுள்ளேன் என்றார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு பத்மராஜனுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மகாதேவன், அவருக்கு மாற்று வேட்பாளராக மருதமுத்துவும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT