Last Updated : 19 Oct, 2016 04:00 PM

 

Published : 19 Oct 2016 04:00 PM
Last Updated : 19 Oct 2016 04:00 PM

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் கூடாது: உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப் படையி்ல் உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் இளங்கோவன் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, தமிழகத்தில் ஆம்னி பஸ் கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்வது தொடர்பாக உள்துறை செயலர், போக்குவரத்துத்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளை முதல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறப்பு அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “ஒப்பந்த வாகனங்களை பொறுத்த வரை அதில் உள்ள வசதிகளைப் பொறுத்து கட்டணம் நிர்ணயம் செய்யலாம். ஆம்னி பஸ் கட்டண உயர்வு தொடர்பாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அரசிடம் அதிகாரப்பூர்வமாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை” என்றார்.

இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி மதுரை மாவட்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்து, மூத்த வழக்கறிஞர் வாதிடும் போது, ‘‘ஆம்னி பஸ்களில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வசூலித்த கட்டணத்தில் இருந்து 10 சதவீத கட்டணம்தான் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். திரும்ப செல்லும்போது ஆட்கள் இல்லாமல் செல்வது, டீசல் விலை உயர்வு, பணியாளர்கள் சம்பளத்தை கணக்கிட்டு கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களின்போது கூடுதல் கட்டணம் வசூலிக்க விதியில் இடம் உள்ளது” என்றார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்வதற்காக நியமிக்கப் பட்டவர் (அமிகஸ்கியூரி) வாதிடும் போது, ‘‘ஆம்னி பஸ் கட்டணம் தொடர்பாக பொதுநலன் வழக்கு களில் மும்பை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாநில அரசு ஒரு குழு அமைத்து ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம்” என்றார்.

நீதிமன்றத்தில் ஆஜரான போக்குவரத்து துணை ஆணையர் பாலன் கூறும்போது, “ஆம்னி பஸ்கள் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக தனி அரசாணை எதுவும் இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் மட்டுமே எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. தற்போது நிர்ணயம் செய்துள்ள கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வெளியிட்டுள்ள கட்டண பட்டியல் அடிப்படையில் தீபாவளி விடுமுறை காலமான அக். 27 முதல் 31 வரை கட்டணம் வசூலிக்கக்கூடாது.

கடந்த ஆண்டு தீபாவளி விடுமுறையின்போது வசூல் செய்த கட்டணத்தைத்தான் (சென்னை - மதுரை கடந்த ஆண்டு கட்டணம் ரூ.800) தற்போது வசூலிக்க வேண்டும். ஏற்கெனவே டிக்கெட் பதிவு செய்திருப்பவர்களுக்கு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும்.

இப்போதில் இருந்து அக். 26-ம் தேதி வரையும், நவ. 1-ம் தேதியில் இருந்தும் சாதாரண கட்டணத்தை (சென்னை - மதுரை ரூ.550) வசூல் செய்ய வேண்டும். இந்த உத்தரவை போக்குவரத்து ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. இந்த உத்தரவு மீறப்பட்டால் அனைத்து அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். பின்னர் விசாரணை நவ. 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதி தலைமையில் குழு

ஆம்னி பஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கலாம். அது தொடர்பாக அரசு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x