Published : 23 Oct 2016 12:41 PM
Last Updated : 23 Oct 2016 12:41 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ அறுவடை பணி முடியும் தருவாயில், பருவமழையை நம்பி கும்பப்பூ நெல் நடவுப்பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சிறந்த நாற்றங்காலை தயார் செய்து நடவு வயல் தயார் செய்வது குறித்து விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
பருவமழை பொய்த்துள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் அறுவடை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 500 ஹெக்டே ருக்கு குறைவாக மட்டுமே இனி அறுவடை பாக்கியுள்ளது. இந்நிலை யில், வடகிழக்கு பருவமழையும் இதுவரை தொடங்காததால், அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதை நம்பி விவசாயப் பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டிய விவசாயிகள், தற்போது நாற்றங்கால் தயாரிப்பு பணி மற்றும் நடவுப் பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் அவ்வப்போது சாரல் பொழிந்துவரும் நிலையில் கனமழை பொழியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெல் நடவுப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொன்மணி ரகம்
பொன்மணி, டி.பி.எஸ்.3 எனப்படும் திருப்பதிசாரம்-3 ஆகிய ரகங்கள் தற்போது நடவு செய்யப் பட்டு வருகின்றன. முதல்கட்டமாக நட்டு 155 நாளில் அறுவடை செய்யப் படும் பொன்மணி ரகங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் நடவுப்பணிக்கு தற்போது தண்ணீர் கிடைக்காமல் உள்ள வயல்பரப்பில் 20 நாள் தாமதமாக, அதாவது 135 நாளில் அறவடை ஆகும் டி.பி.எஸ்.3 ரக நாற்றங்கால்களை நட வேளாண்துறை பரிந்துரை செய்துள்ளது. விதை நெல்கள் குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றிய வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இம் முறை தட்டுப்பாடின்றி கிடைக்கிறது.
நடவுக்கு யோசனை
குமரி மாவட்டத்தில் தற்போது நிலவும் தட்பவெப்பத்தை பயன்படுத்தி நெல் நடவு வயல்களை தயார் செய்யுமாறு, குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோ விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து `தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
குமரி மாவட்டத்தில் தற்போது கும்பப்பூ நெல் நடவுப்பணிகள் நடந்து வரும் நிலையில், நெற்பயிர் சாகுபடியில் நடவு வயல் தயாரிப்பு முக்கிய பங்கை வகிக்கிறது. உரிய முறையில் தயார் செய்யப்பட்ட நடவு வயல், அதிக விளைச்சல் பெறும் தன்மை பெறுகிறது.
சிறந்த நெல் நடவு வயலை தயாரிக்க நடவு செய்யும் வயலில் நன்றாக தண்ணீர் பாய்ச்சி, 6 முதல் 8 முறை வரை நன்றாக உழவு செய்ய வேண்டும். வரப்புகளை வெட்டி சரி செய்வதுடன், சேறு கொண்டு பூசி தண்ணீர் கசியாமல் பாதுகாக்க வேண்டும்.
உரமிடுதல்
நடவு செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னரே ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம், அல்லது 2.5 டன் பசுந்தாள் உரம் இட்டு நன்கு சேறுடன் கலக்க வேண்டும்.
கடைசி உழவின் போது ஏக்கருக்கு அடியுரமாக யூரியா 32.5 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 125 கிலோ, பொட்டாஷ் 8.5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். மேலும் நடவு செய்வதற்கு முன்பு ஏக்கருக்கு 4 பாக்கெட் அசோஸ் பைரில்லம், 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்களை 10 கிலோ மக்கிய தொழு உரங்களுடன் 10 கிலோ மணலுடன் கலந்து நடவு வயலில் சீராக தூவவேண்டும்.
இதுபோல் நடவுக்கு முன்னர் ஏக்கருக்கு சூடோமோனஸ் புளோரசன்ஸ் 400 கிராம் என்ற அளவுக்கு நடவுக்கு முன்னர் இடவேண்டும். நெல் நுண்ணூட்ட உரத்தை பொறுத்தவரை நெற் பயிரில் துத்தநாக சத்து குறைபாடு ஏற்படாமல் தடுத்திடும் வகையில், சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் 10 கிலோ துத்தநாக சல்பேட்டை 20 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து இடவேண்டும். துத்தநாக சல்பேட்டை இதர ரசாயன உரங்களுடன் கலந்து இடக்கூடாது.
மேலும் களைக்கொல்லியை வயல்களில் பயன்படுத்துவது அவசியமாகும். வயல் சமன்படுத்தப்பட்டதில் இருந்து 3-ம் நாளில் பிரிட்டிலா குளோரைடு லிட்டருக்கு 600 மில்லி என்ற அளவில் இடவேண்டும். வயல் களில் முதலில் இரண்டரை செ.மீ., அளவுக்கு தண்ணீர் இருக்க வேண்டும். களைக்கொல்லி மருந்து இட்ட 3 நாட்களுக்கு தண்ணீரை வடிக்கக் கூடாது.
புதிதாக வயலில் நீர்ப்பாச்சவும் கூடாது. இவ்வாறு சிறப்பான முறையில் தயார் செய்யப்பட்ட நடவு வயிலில் நெற்கன்றுகளை நடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT