Published : 24 Aug 2022 04:30 AM
Last Updated : 24 Aug 2022 04:30 AM

காலணி, தோல் பொருட்களுக்கு புதிய கொள்கை வெளியீடு - ரூ.2,250 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்பந்தம்

சென்னையில் நேற்று நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. உடன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர்.படம்: ம.பிரபு

சென்னை: சென்னையில் நேற்று காலணி, தோல் பொருட்களுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காலணித் தொழிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தமிழக தொழில் துறை சார்பில் காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 5 முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து, காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டனர். பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழக அரசைப் பொறுத்தவரை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்கள் வகுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதை மனதில் கொண்டுதான் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.

பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்படும், செமிகண்டக்டர், மின் வாகனங்கள், சோலார் செல்கள் உற்பத்தி, தகவல் தரவு மையங்கள், பெட்ரோலியப் பொருட்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள், நகைகள், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்துகிறோம். இந்த துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

எந்த துறையாக இருந்தாலும், அதை முன்னோக்கிச் செலுத்த சிறந்த கொள்கை வகுக்க வேண்டும். அந்தவகையில், காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், பசுமை ஹைட்ரஜன் கொள்கை, எத்தனால் கொள்கை, திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை, திருத்தப்பட்ட வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகள் வெளியிடப்படும்.

அதேபோல, வழக்கமான சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் விரைவில் வெளியிடப்படும்.

தேசிய அளவில் காலணி உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 26 சதவீதமாகவும், ஏற்றுமதியில் 45 சதவீதமாகவும் உள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் காலணி மற்றும் தோல் உற்பத்தியில் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்ப்பது, 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது ஆகியவையே புதிய கொள்கையின் நோக்கம்.

சிப்காட், சிட்கோ மற்றும் பொது-தனியார் கூட்டாண்மை மூலம், 30 முதல் 50 ஏக்கர் பரப்பில் தொழில்பூங்காக்கள் வடிவில் ஆயத்த தொழில்கூடங்களுடன், புதிய தோல் அல்லாத காலணி உற்பத்திக்கான பசுமைத் தொகுப்புகளை அரசு உருவாக்க உள்ளது.

தோல் அல்லாத காலணிகள் துறை மீதும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போதைய கொள்கையில், தோல் அல்லாத காலணித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.400 கோடியில், 250 ஏக்கர் பரப்பில் காலணி உற்பத்திப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தற்போது காலணி உற்பத்திக்கான மூலப் பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை உள்ளது. இந்தப் பூங்கா மூலம், மூலப் பொருட்களையும் நாமே தயாரிக்க முடியும். உலகச் சந்தையில் ‘மேக் இன் தமிழ்நாடு’ முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்ற லட்சியத்தை இத்திட்டம் நிறைவேற்றும். காலணித் தொழில் மேலும் சிறப்படைய, அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த மாநாட்டில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறைச் செயலர் அருண்ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் பூஜா குல்கர்ணி, தோல் ஏற்றுமதிக் கழக மண்டலத் தலைவர் இஸ்ரார் அகமது, காலணி மேம்பாட்டு மன்றத் தலைவர் ராஜ்குமார் குப்தா, தோல் ஏற்றுமதிக் கழக செயல் இயக்குநர் ஆர்.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கோத்தாரி- பீனிக்ஸ் அக்கார்டு நிறுவனம் சார்பில் காலணி உற்பத்திக்காக ரூ.1,200 கோடி முதலீடு, ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்புக்காக ரூ.500 கோடி முதலீடு, கோத்தாரி- எஸ்இஎம்எஸ் குழுமம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்திக்காக ரூ.300 கோடி முதலீடு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, வேகன் குழுமம் சார்பில் தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்திக்கு ரூ.150 கோடி முதலீடு, வாக்கரூ நிறுவனம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ரூ.100 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.பெரம்பலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அமையும் இந்த திட்டங்கள் மூலம் 37,450 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x