Published : 24 Aug 2022 04:02 AM
Last Updated : 24 Aug 2022 04:02 AM
சென்னை: தங்களது தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கியக் கோரிக்கைகளை, அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு 15 நாட்களுக்குள் அனுப்புமாறு அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
திமுக அரசு பொறுப்பேற்று கடந்த மே 7-ம் தேதி ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் விரிவாக்கம் உள்ளிட்ட 5 புதிய திட்டங்களை சட்டப்பேரவையில் அறிவித்தேன்.
மக்களின் தேவைகளை நன்கு உணர்ந்து, அவற்றை நிறைவேற்றும் பெரிய பொறுப்பு, அவர்களது பிரதிநிதிகளான நமக்கு உள்ளது. குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்கள் மூலம் அவற்றைச் செயல்படுத்த இயலாத நிலை இருக்கலாம்.
அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெற வேண்டிய அவசியமும் இருக்கலாம். இந்த திட்டங்களை அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் உருவாக்கும்.
எனவே, உங்கள் தொகுதிக்கு உட்பட்ட ஊரக, நகர்ப்புறப் பகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத மக்களின் கோரிக்கைகளை, அவற்றின் தேவை மற்றும் அவசியத்தின் அடிப்படையில் ஆராய்ந்து, அவற்றில் முக்கியமானவை எனக் கருதும் 10 திட்டங்கள் குறித்த பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
இந்த பரிந்துரைப் பட்டியலை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
அந்தப் பட்டியலில் உள்ள முக்கியத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாதவற்றுக்கு முன்னுரிமை தந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பரிசீலித்து, உரிய ஒப்புதல் வழங்கப்படும்.
பல ஆண்டுகளாக நிறைவேறாத மக்களின் நீண்டகாலத் தேவைகள், இந்த புதிய முன்னோடித் திட்டத்தின் கீழ், உங்கள் மூலமாக நிறைவேறும் என்று நம்புகிறேன்.
மாவட்டங்களுக்கு இடையில் இருக்கும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரிசெய்து, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவும் இந்த திட்டம் பங்களிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பையும் நீங்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
என்னென்ன திட்டங்கள்...
நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள குடிநீர் மற்றும் நீராதாரத்தை மேம்படுத்தும் உள்கட்டமைப்பு வசதி, வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்தல், இணைப்பு பாலம், சாலை, மருத்துவ வசதி, பள்ளி, கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் கட்டமைப்புகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வசதி, மின் மயானம், நவீன நூலகம், நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், புதிய சுற்றுலாத் தலம் மற்றும் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தல் போன்ற சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய பணிகளை எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கலாம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT