Published : 06 Oct 2016 09:56 AM
Last Updated : 06 Oct 2016 09:56 AM
இரை, இனப்பெருக்கத்துக்காக பச்சைமலையிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வண்ணத்துப்பூச்சிகள் வலசை புறப்பட்டுள்ளன.
மனித வாழ்க்கைக்கும், சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கும் வண்ணத் துப்பூச்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கும் பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் நன்றாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 320 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 225-க்கும் மேற்பட்ட இனங்கள் திருச்சி மாவட்டம் துறை யூர் அருகே உள்ள பச்சைமலை யில் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு பட்டர்ஃபிளைஸ் சொசைட்டியினர், சில வாரங் களுக்கு முன் இங்கு கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஸ்கிப் பர்ஸ் (குதிக்கும் வண்ணத்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 15 இனங் களும், ஸ்வால்லவ் டைல்ஸ் (நீல வால் வண்ணத்துப்பூச்சி) குடும் பத்தைச் சேர்ந்த 9 இனங்களும், வொயிட் அண்ட் எல்லோஸ் (மஞ் சள், வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 20 இனங்களும், ப்ளூஸ் (நீல நிற வண்ணத்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 28 இனங்களும், ப்ரஷ் பூட்டெட் (தூரிகை நடக்கும் வண் ணத்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 33 இனங்களும் என மொத் தம் 105 வகையான இனங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ள தாக அறிவித்தனர்.
இந்நிலையில் இரை தேவைக் காகவும், இனப்பெருக்கத்துக்காக வும் இங்கு உள்ள வண்ணத்துப் பூச்சிகளில் சின இனங்கள், தற் போது வலசை (ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) செல்லத் தொடங்கியுள்ளது தெரியவந்துள் ளது.
இதுகுறித்து உப்பிலியபுரத்தைச் சேர்ந்த தியானேஸ்வரன் கூறும் போது, “கடந்த 2 நாட்களாக பச்சை மலைக்கு அருகில் உள்ள உப்பி லியபுரம், பி.மேட்டூர், பச்சை பெருமாள்பட்டி, அழகாபுரி, ஓசரப் பள்ளி, சோபனாபுரம், வைரிச் செட்டிப்பாளையம், புளியஞ் சோலை உள்ளிட்ட பகுதிகளில், வழக்கத்தைவிட அதிக அளவில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்வதை காண முடிகிறது” என்றார்.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டர்பிளைஸ் சொசைட்டியின் நிறுவன உறுப்பினர் அ.பாவேந்தன் கூறும்போது, “கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சிகளில் சில, இரை மற்றும் இனப்பெருக்கத்துக்காக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் முதல் வாரத் துக்குள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும். இதற்கு வலசை செல்லுதல் என பெயர்.
இதன்படி, தற்போது பச்சை மலை பகுதியில் உள்ள மஞ்சள், வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்த இமிகிரேட்ஸ் காமன், மொப்ளடு வகைகளைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை நோக்கி வலசை செல்லத் தொடங்கியுள்ளன.
பச்சைமலையைச் சுற்றியுள்ள சுமார் 7 கி.மீ. பரப்பளவில் இருந்து பயணத்தைத் தொடங்கிய வண்ணத்துப்பூச்சிகள், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு இடைப்பட்ட சுமார் 30 கி.மீ. பரப்பளவில் பயணித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அடைகின்றன” என்றார்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் சதீஷிடம் கேட்டபோது, “வண்ணத்துப்பூச்சிகள் ஒரே இடத் தில் வசிக்கக்கூடியவை அல்ல. இரை தேவைக்காக அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த இடப்பெயர்ச்சி, பருவகால மாற்றங்களின்போது ஆண்டுதோறும் நடக்கக் கூடியதுதான். பச்சைமலையில் இருந்து சில வகை வண்ணத்துப்பூச்சிகள், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வலசை செல்லத் தொடங்கிவிட்டன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT