Published : 23 Aug 2022 06:17 PM
Last Updated : 23 Aug 2022 06:17 PM
புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டால் புதுச்சேரி மக்களுக்கு எந்தவித பலனும் இல்லை” என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால், இதில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டு வர எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் சொல்லப்படுகின்றன. கடந்தாண்டு முதல்வர் சொன்ன அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவாக இருக்கிறது.
கல்வியை பொறுத்தவரையில் கடந்தாண்டு கொடுத்த திட்டங்களை தவிர புதிதாக ஒன்றும் இல்லை. பள்ளிகள், கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நிதி மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ரங்கசாமி பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டபோது, அதனை கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். இது ஒன்றும் புதிய திட்டமல்ல. சைக்கிள் கொடுக்கும் திட்டத்தையும் நாங்கள் கொண்டுவர முயற்சித்தோம். அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இத்திட்டம் பயன்படும் என்பதால் எதிர்கட்சியாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
முதல்வர், அரசின் எந்த உதவிகளையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 21 வயது முதல் 55 வயது வரை இருக்கின்ற குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். இதில் 5 சதவீதம் பேர்தான் பலனடைவார்கள். 95 சதவீதம் பேருக்கு இதனால் பலனில்லை. இந்த திட்டம் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற திட்டம்.
பிரதமரை, முதல்வர் சந்தித்து ரூ.2 ஆயிரம் கோடி நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து அவருக்கு சாதகமான பதில் எதுவும் வரவில்லை. பாஜகவை சேர்ந்தவர்கள் ஒருபுறம் முதல்வருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், மற்றொருபுறம் நிதி கொடுப்பதில்லை. இதிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் மிகப் பெரிய விரிசல் இருக்கிறது தெரிகிறது.
ரங்கசாமியை பாஜக ஆட்டிப்படைக்கிறது. ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் செயல்படுகிறார்கள் என்று நான் சொன்னது ஒவ்வொன்றாக நிரூபனமாகி வருகிறது.
முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஒட்டுமொத்தமாக பார்த்தால் உப்பு சப்பு இல்லாத, புஸ்வானமாக இருக்கின்ற பட்ஜெட்டாக இருக்கிறது. மாநில வளர்ச்சிக்கான, மாநிலத்தின் தொலை நோக்குப்பார்வை கொண்ட பட்ஜெட்டாக இல்லை. புதுச்சேரி மாநில மக்களை வஞ்சிக்கின்ற பட்ஜெட்டாக இது இருக்கின்றது. இதனால் புதுச்சேரி மாநில மக்களுக்கு எந்தவிதமாக பலனும் இல்லை'' என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT