Published : 23 Aug 2022 03:50 PM
Last Updated : 23 Aug 2022 03:50 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் வரும் நிதியாண்டில் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கலாகும். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம்” என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியாக தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக மார்ச்சில் முழு பட்ஜெட் தாக்கலாவதில்லை. இடைக்கால பட்ஜெட் மார்ச்சில் தாக்கல் செய்யப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் பெறப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்தான் முழு பட்ஜெட் தாக்கலாகிறது. தற்போது பட்ஜெட் தாக்கலாகி பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. இம்முறை ஆறு நாட்கள் இக்கூட்டம் நடக்கிறது. அலுவல் ஆய்வுக்குழு இதை முடிவு செய்துள்ளது. பேரவைத்தலைவர் செல்வம், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளுக்கு ஒப்புதல் பெறும் தீர்மானத்தை முதல்வர் ரங்கசாமி முன்மொழிவார் என இன்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, அலுவல் ஆய்வுக்குழு முடிவுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர் கல்யாணசுந்தரம், ''சட்டப்பேரவையை கூடுதலாக 10 நாட்கள் நடத்த வேண்டும். புதிய அரசு அமைந்து 15 மாதத்துக்கு மேலாகிவிட்டது. மக்கள் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும்." என்றார்.
திமுக எம்எல்ஏ சம்பத், "கூடுதல் நாட்கள் நடத்த முடியாமல் போனால் காலை, மாலை என 2 வேளை சட்டசபையை நடத்த வேண்டும்" என கோரினார்.
அதேநேரத்தில் எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக உறுப்பினர்கள் நாஜிம், கென்னடி, நாகதியாகராஜன், செந்தில்குமார், சிவசங்கரன், வைத்தியநாதன் ஆகியோரும் எழுந்து, ''சட்டப்பேரவையை கூடுதல் நாட்கள் நடத்த வேண்டும்'' என வலியுறுத்தினர்.
அப்போது முதல்வர் ரங்கசாமி பேசியது: ''அடுத்த நிதியாண்டில் மார்ச் மாதமே பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். அப்போது கூட்ட நாட்களும் அதிகளவு நடைபெறும். அந்த கூட்டத்தில் உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள். மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம், கடமை.
தற்போது 31ம் தேதிக்குள் பட்ஜெட்டை நிறைவேற்ற வேண்டும் என்பதால் கூட்டத் தொடர் நாட்களை குறைவாக வைத்துள்ளோம், காலை, மாலை என 2 வேளை நடத்தினால் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படும். மறுநாளுக்கான பதில்களை தயாரிக்க முடியாது. அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக குறைகள் சில இருக்கலாம். அதை சரி செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்யவேண்டும். தற்போதைய பணிகளை ஆறுமாதங்களில் முடிக்கவேண்டும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT