Published : 23 Aug 2022 02:49 PM
Last Updated : 23 Aug 2022 02:49 PM
கோவை: ஈரோடு வருகை தரும் முதல்வர் அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகளில் நிறைவேறாத பகுதிகளை பார்வையிடாத பட்சத்தில் பாஜக மவுனப் போராட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவு பெறாத நசியனூரில் கொங்கு மண்டலத்தின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கும் மிக முக்கியத் திட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் விவசாயிகளின் 60 ஆண்டு கால போராட்டத்திற்குப் பின்னர் ரூ.1856.88 கோடி செலவில் கடந்த 28.02.2019 அன்று அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன.
ஜனவரி 2021, பொங்கல் தினத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர வேண்டிய திட்டம் கடந்த 17 மாதங்களாக அதிகாரிகளின் மெத்தனத்தால் வெறும் 2.2 (2200 மீட்டர் மட்டுமே) கி.மீ. தூரத்திற்கு குழாய் பதிக்கப்படாமல் பணிகள் தடைப்பட்டுள்ளது.
96.5% பணிகள் முடிவடைந்தும், திட்டம் நிறைவேற்றப்படாததால் கடந்த ஆண்டு பவானி ஆற்றில் 30 டிஎம்சி தண்ணீரும், இந்தாண்டு 50 டிஎம்சி தண்ணீரும் உபரியாகச் சென்று கடலில் கலந்துள்ளது. வெறும் 1.5 டிஎம்சி தண்ணீரால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1045 குளம், குட்டைகளை நீரால் நிரப்பியிருக்க முடியும்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஆனால் விவசாயிகள் தற்போது குடிநீருக்காகவும், கால்நடைகள் வளர்ப்பிற்காகவும், விவசாயித்திற்காகவும் லட்சக்கணக்கில் செலவு செய்து 1000 அடிக்குமேல் ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாஜக விவசாய அணி சார்பாக நான் பார்வையிட்டதில், திட்டம் தொடங்கும் பவானி ஆற்றில் 750 மீட்டரும், 2 மற்றும் 3க்கு இடைப்பட்ட பம்ப் ஹவுஸ் பகுதியில் 250 மீட்டரும், முல்லாம்பட்டி அருகில் 1.2 கி.மீட்டரும் உப்புசப்பில்லாத காரணங்களுக்காக குழாய் பதிக்கப்படாமல் ஒரு சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஈரோடு வரும் தமிழக முதல்வர் திட்டம் நிறைவுபெறாத பகுதிகளை பார்வையிட வேண்டுன்று பாஜக விவசாய அணியின் சார்பாக கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் திட்டம் நிறைவுபெற்ற பகுதியான கிரே நகர் பம்ப் ஹவுஸ் பகுதியை பார்வையிட போவதாக அதிகாரபூர்வமான செய்தி வெளியாகியுள்ளது.
இதனால் திட்டத்தின் உண்மைநிலையை தமிழக முதல்வர் அறிந்துகொள்ளாமல் போக முடியும். எனவே, தமிழக முதல்வர் பணி நிறைவுபெறாத இடங்களைப் பார்வையிட வேண்டுமென்று பாஜகவின் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது.
பார்வையிடாத பட்சத்தில், பம்ப் ஹவுஸ் இரண்டுக்கும் மூன்றுக்கும் இடைப்பட்ட நசியனூர் பகுதியில் நிறைவு செய்யப்படாமல் குழாய் பதிக்கப்படாமல் இருக்கும் இடத்தில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி அமைதியான முறையில் மவுன அமர்வு நடத்தப்படும்.
இது தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்ப்பதற்கான, உண்மையை வெளிப்படுத்துவதற்கான போராட்டமாகும். இப்போராட்டத்தில் பொதுமக்களும், பாஜக நிர்வாகிகள் அனைவரும் காலை 10 மணி முதல் 12 மணி வரை கருப்பு முகக்கவசம் அணிந்து அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT