Published : 23 Aug 2022 12:03 PM
Last Updated : 23 Aug 2022 12:03 PM
சென்னை: "தமிழக அரசை பொருத்தவரை எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அவ்வாறு அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். இதை மனதில் வைத்துதான் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் " ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும், புதிய புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும் தமிழகத்தை நோக்கி ஏராளமான நிறுவனங்கள் வருவதும், வளர்வதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு ஒரு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தொழில் நிறுவனைங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில், 3-ம் இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்துள்ளது. தொழில்துறை சிறப்பாக நிர்வகிப்பவர்களால் நிர்வகிக்கப்படுவதே இதற்கு காரணம்.
2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை அடைவதற்கு பெருமளவில் மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, பெருமளவு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொழில் முதலீடுகளையும் ஈர்க்க வேண்டும்.
தமிழக அரசை பொருத்தவரைக்கும் எந்த திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான் அது அமையும். அவ்வாறு அமைய வேண்டும் என்று நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.இதை மனதில் வைத்துதான் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகிறது.
காலணி மற்றும் தோல் பொருட்கள் துறையின் மேம்பாட்டிற்காக இன்று "தமிழ்நாடு தோல் பொருட்கள் கொள்கை 2022" வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல் மேலும் பல கொள்கைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.
இந்திய அளவில் காலணி உற்பத்தியில், தமிழ்நாட்டின் பங்களிப்பு 26 விழுக்காடாகவும், ஏற்றுமதியில் 45 விழுக்காடாகவும் உள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தோல் பொருட்கள், உலக சந்தையில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே அதிக அளவிலான காலணிகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மையங்கள் அமைந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT