Published : 23 Aug 2022 09:00 AM
Last Updated : 23 Aug 2022 09:00 AM

மின் கட்டண உயர்வு விவகாரம்: அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதில்

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உரிய காலத்தில் கொடுப்பதில்லை என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.

கோவை ஈச்சனாரியில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவுக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: விழாவில், 1 லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். தமிழக வரலாற்றில், ஒரே நிகழ்ச்சியில் இவ்வளவு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

பொள்ளாச்சியில் நடைபெறும் கட்சி விழாவில், மாற்றுக்கட்சியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைகின்றனர்.

மத்திய அரசுக்கு மின்கட்டண நிலுவை தொகை ரூ.70 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு கொடுக்க வேண்டிய பில் தொகை தாமதமாகும் போது மத்திய அரசு தடை ஏற்படுத்துகிறது. ஆனால், மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை பலவற்றில் நிலுவை உள்ளது. அவற்றை எல்லாம் உரிய காலத்தில் கொடுப்பதில்லை.

மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தனிப்பட்ட அமைப்பு. அதன் அதிகாரங்களை பறிக்கக் கூடிய செயலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. இதற்காகத்தான் நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்பு கூட்டம், கபட நாடகம் என்று கூறும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக ஆளும் மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுவதும் கபட நாடகமா என்பதையும் விளக்க வேண்டும்.

கர்நாடகா, குஜராத் மாநிலங்களின் மின் கட்டணத்தையும், இங்குள்ள மின் கட்டணத்தையும் பார்த்துவிட்டு அவர் பேச வேண்டும். இவை குறித்து பலமுறை கேட்டும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை. வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்றம் செய்வது மாநகராட்சியின் முடிவுக்கு உட்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x