Published : 23 Aug 2022 04:19 AM
Last Updated : 23 Aug 2022 04:19 AM

போக்குவரத்து துறையின் வருவாயை பெருக்க நடவடிக்கை - சேவைக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்படுகின்றன

சென்னை: போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இம்மாத இறுதியில் அமலாகும் எனக் கூறப்படுகிறது.

தமிழக உள்துறையின்கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் துறை, உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், மோட்டார் வாகன வரி, பசுமை வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த வகையில் அரசுக்கு ரூ.5,272 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்நிலையில், மோட்டார் வாகன வரி, பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்டவற்றை தவிர்த்து மற்ற சேவைக் கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்தது. இதற்காக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்கான வரைவு, கடந்த ஜூலை 25-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 10 மடங்குக்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கருத்துகள், எதிர்ப்புகளைத் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் முடியவுள்ள நிலையில், புதிய கட்டணத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, தற்காலிகப் பதிவு, தற்காலிகப் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.200 ஆகவும், வேறு மண்டலங்களில் வாகன தகுதிச்சான்று கட்டணமாக ரூ.500-ம், தகுதிச்சான்று நகல் பெற ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த தகுதிச்சான்று பெற கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தகுதிச்சான்று பெறாதவாகனங்களை திரும்பப் பெறுவதற்கான சிஎஃப்எக்ஸ் நோட்டீஸ் வழங்கப்படும்போது ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது இக்கட்டணம் ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அல்லது பதிவு அதிகாரியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருந்த ரூ.40 கட்டணம் ரூ.500 ஆகவும், வாகன ஆவணங்களுக்கான சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கு ரூ.75-க்கு பதில் ரூ.400 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-லிருந்துரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் தாமதமாக சமர்ப் பித்தால் ரூ.200-ம், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டுக்கான கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு இம் மாதம் இறுதியில் அமலாகலாம் என போக்குவரத்துத் துறை தரப்பில் கூறப்படுகிறது. வாகனச் சோதனை மையங்களுக்கான அனுமதிக் கட்டணம் ரூ.1000-த்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், அனுமதியைப் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x