Published : 22 Aug 2022 05:18 PM
Last Updated : 22 Aug 2022 05:18 PM
காரைக்கால்: மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவே சில இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் கூறியுள்ளார்.
காரைக்காலில் இன்று (ஆக.22) அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனையும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் தொடர்ந்து அரசு கண்காணிக்கும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக உள்ளது. இதனால் மாநிலம் வளர்ச்சிப் பெறும், மக்களின் பொருளாதார நிலை மேம்படும்.
புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா, முதல்வரிடம் நேரில் நல்ல பட்ஜெட் என்று கூறிவிட்டு, செய்தியாளர்களிடம் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அவர் இரட்டை வேடம் போடுகிறார்'' என்றார்.
இலவசத் திட்டங்களை பிரதமர் உள்ளிட்ட பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு இலவசங்களை அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''மக்களுடைய பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு சில இலவசத் திட்டங்களை இந்த அரசு அறிவித்துள்ளது. நாடு வளர்ச்சிப்பெற வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் பல்வேறு செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த அடிப்படையில், பொருளாதார மேம்பாட்டுக்காக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT