Published : 22 Aug 2022 02:39 PM
Last Updated : 22 Aug 2022 02:39 PM

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22.8.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2021 – 2022 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், "சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்" எனவும், "சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய ஓதுவார் பயிற்சி பள்ளி ஏற்படுத்தப்படும்" எனவும், "திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாத சாமி திருக்கோயிலில் உள்ள தவில் நாதஸ்வர இசைப் பள்ளி மேம்படுத்தப்படும்" எனவும், "ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் சார்பாக திவ்ய பிரபந்த பாடசாலை மீண்டும் தொடங்கப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, சென்னை (வைணவம்), திருவண்ணாமலை (சைவம்), மதுரை (சைவம்), திருச்செந்தூர் (சைவம்), பழநி (சைவம்) மற்றும் ஸ்ரீரங்கம் (வைணவம்) ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர், அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து, அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 18 மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளையும் வழங்கினார்.

மேற்கண்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உள்பட 9 பயிற்சிப் பள்ளிகளும் உண்டு உறைவிட பள்ளியாக செயல்படுவதோடு, பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதம் ரூ.3000 வீதம் ஆண்டு ஒன்றிற்கு மொத்தம் 70.92 லட்சம் ரூபாய் உதவித் தொகை திருக்கோயில்கள் சார்பாக வழங்கப்படுகிறது

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு , சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x