Published : 22 Aug 2022 01:08 PM
Last Updated : 22 Aug 2022 01:08 PM

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சட்டவிரோதமாக கைதானோருக்கு இழப்பீடு கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளிக் கலவரம் தொடர்பாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில் அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுகிறார். இதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும். மேலும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x