Published : 22 Aug 2022 09:00 AM
Last Updated : 22 Aug 2022 09:00 AM

நிதித் துறைக்கு பொருத்தம் இல்லாமல் விமர்சனங்களை வைக்கிறார் பிடிஆர்: வானதி சீனிவாசன்

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டினார்.

கோவை பெரியகடை வீதி, தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, இ-ஷ்ரம் எனும் அமைப்புசாரா தொழிலாளர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற வானதி சீனிவாசன் கூறியதாவது:

அமைப்புசாரா தொழிலாளர் நல அட்டை வைத்திருப்பவர்கள் உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் இந்த அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்றாலும், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை பல்வேறு இடங்களில் இதற்காக முகாம்களை நடத்த வேண்டும். இதன்மூலம் ஏழை, எளிய தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை.

சட்டப்பேரவையில் இ-ஷ்ரம் அட்டை குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கேட்டபோது, குறைவான எண்ணிக்கையை தெரிவித்தார். ஆனால், கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களை இந்த திட்டத்தில் இணைக்க முடியும். தமிழக அரசிடம் இருப்பதோ லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தகவல்கள் மட்டுமே. இது, மத்திய அரசின் திட்டம் என்று பார்க்காமல் ஏழை எளிய மக்களுக்கு உதவிட தமிழக அரசு முன்வர வேண்டும்.

மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த பொறுப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாமல், விமர்சனங்களை வைத்து வருகிறார். அரசியலில் இருப்பதற்கு அடிப்படையாக மக்கள் நேசிக்கும் குணம்தான் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x