Published : 22 Aug 2022 06:34 AM
Last Updated : 22 Aug 2022 06:34 AM
சென்னை: தமிழகத்தில் உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவுப்பாதுகாப்புத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் வருகின்றனர்.
இதற்கேற்ப, உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே செல்கின்றன.
பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில், தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினரின் ஆய்வு அதை உறுதிப்படுத்தியுள்ளது.
பெரிய உணவகங்களில்கூட, சமையலறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், துர்நாற்றம் வீசியதையும், உணவுப் பொருட்களில் புழு, பூச்சிகள் இருந்ததையும், தரம் மிகவும் குறைவாக இருந்ததையும், சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி வைக்கப்பட்டு இருந்ததையும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
இது உணவகங்களை நம்பியிருக்கும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை ரசாயனங்களைக் கொண்டுபளபளப்பாக மாற்றப் படுவதாகவும், அப்பளத்தில் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும், அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு பணியாளர்கள், வாகன வசதிகள் மற்றும் இதர வசதிகள் இல்லை என்றும், உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்புத் துறை மேம்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்களோ, சுகாதாரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தனி கவனம் செலுத்தி, உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தி, காலமுறை ஆய்வுகளை மேற்கொண்டு, வருங்காலத்தில் அனைவருக்கும் தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT