Published : 22 Aug 2022 06:45 AM
Last Updated : 22 Aug 2022 06:45 AM
சென்னை: முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் விதிகளினால் பயனாளிகள் இணைவதில் நிலவும் சிக்கல்களை களைய திட்டமிட்டு கள ஆய்வை தொடங்கியுள்ளதாக சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் ஆரம்ப முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்கு பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வு தொகை வழங்கப்படும்.
விதிமுறைகள்: இத்திட்டத்தில் பயனாளிகளை இணைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்; ஆண் குழந்தை இருக்கக் கூடாது, எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள்ளன.
30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த விதிகளினால் தற்போதைய காலக்கட்டத்தில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கண்டறிய சமூகநலத் துறை அதிகாரிகள் கள ஆய்வை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெண் குழந்தைகள் உள்ள பெற்றோரில் ஒருவர் 35 வயதுக்குள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த விதியினால் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாடு வயது வரம்பை கடந்த ஆண்டு தமிழக அரசு 40 ஆக உயர்த்தியது. இதனால், ஓராண்டில் கூடுதலாக சுமார் 1000 குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர்.
தற்போதைய காலக்கட்டத்தில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கு மேல் இருந்தாலேயே வசதியான குடும்பமாக கருத முடியாது, ஆண் குழந்தைகள் இருந்தால் பெண் குழந்தைகளை திட்டத்தில் இணைக்க முடியாது என்பன போன்ற விதிகளினால் ஆண்டுதோறும் சுமார்10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
திட்டத்தில் இணைவதற்கு பொதுவான வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படாத காரணத்தால் ஒரே குடும்பத்தில் இருக்கக் கூடிய இரு குழந்தைகளுக்கு முதிர்வுத் தொகை வெவ்வேறாக வருகிறது.
இதுபோன்று விதிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களை களைய பொதுமக்களை நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் கருத்துகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், பயனாளிகள் இணைவதற்கான திட்டத்தின் விதிகளில் தமிழக அரசு மாற்றம் செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT