Published : 22 Aug 2022 06:50 AM
Last Updated : 22 Aug 2022 06:50 AM
சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 7 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை என்று எஸ்.நாகய்யாஎன்பவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உங்கள் குரலில் புகார் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நான் அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்பேடு கிளையில் நடத்துநராகப் பணியாற்றி கடந்த 2010-ம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படவில்லை. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. எங்களுக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினால், ஓய்வூதிய நிதிபொறுப்பாட்சியில் விண்ணப்பிக்குமாறு பதில் அனுப்புகின்றனர்.
தற்போது 72 வயதாகும் என்னால் பல்வேறு அலுவலகங்களின் படி ஏறி எனது உரிமையை கோர முடியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால்தான் போக்குவரத்துத் துறையில் எனக்கு வேலை கிடைத்தது. தற்போது அவரது மகனான முதல்வர் மு.க.ஸ்டாலின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஆலோசித்து வருகிறோம். தற்போது போக்குவரத்துத் துறை சுமார் ரூ.3 ஆயிரம் கோடி கடனில் உள்ளது.
ஆனால் இதை காரணம் காட்டி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவற்றை மறுக்க இயலாது. எனவே இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT