Published : 22 Aug 2022 05:02 AM
Last Updated : 22 Aug 2022 05:02 AM
சென்னை: தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 25 லட்சம் பயண அட்டை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வசிப்பிடத்தில் இருந்து கல்வி நிலையங்களுக்குச் சென்று வரும் வகையில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தொகையை ஈடு செய்வதற்காக ரூ.928 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்குகிறது.
மாணவர்களுக்கு அனுமதி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்களுக்கான பயண அட்டை வழங்கப்படவில்லை. ஆனால், பழைய பயண அட்டை, பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை போன்றவற்றை நடத்துநர்களிடம் காண்பித்து, பேருந்துகளில் கட்டணமில்லாமல் கல்வி நிலையம் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சீருடை அணிந்திருந்தாலே மாணவர்களை பேருந்துகளில் இருந்து இறக்கிவிடக் கூடாது என நடத்துநர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் எந்த பிரச்சினையும் இன்றிபேருந்துகளில் பயணித்து வந்தனர்.
விவரங்கள் சேகரிப்பு: இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பேருந்து பயண அட்டை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகளிடம் இருந்து பேருந்து பணிமனைகளில் பெறப்பட்டன.
இதையடுத்து, அறிக்கைதயார் செய்யப்பட்டு, போக்குவரத்து துறை சார்பில் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமார் 25 லட்சம் பேருந்துபயண அட்டைகள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளன. இதற்கானடெண்டர் அறிவிப்பு விரைவில்வெளியாகும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT