Published : 18 Oct 2016 12:33 PM
Last Updated : 18 Oct 2016 12:33 PM
திருப்பரங்குன்றம் தொகுதி 15-வது சட்டப் பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. இத்தொகுதியை அதிமுக 8-வது முறையாக கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முருகப் பெருமானின் முதற்படை வீடு என்ற பெருமை பெற்ற திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய சட்டப் பேரவைத் தொகுதி ஆகும். இத்தொகுதியில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேல் வெற்றி பெற்றார். இவர் திமுக வேட்பாளர் எம்.மணிமாறனைவிட 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். ஆனால் உடல்நலக் குறைவால் சீனிவேல் இறந்தார். இதனால் இத்தொகுதியில் நவ.19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சர்வதேச விமான நிலையம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், வடபழஞ்சி ஐ.டி. பார்க், நியூட்ரினோ ஆய்வு மையம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவை இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள், அரசு ஊழியர்கள், நெசவு தொழிலாளர்கள் பரவலாக வசித்து வருகின்றனர்.
வைகை பாசன கால்வாய் அமைக்காதது, நறுமண தொழிற்சாலை, பூக்களுக்கான குளிர்விப்பு கிடங்கு, சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை விரிவாக்கம் செய்யப்படாதது போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீண்ட காலமாக உள்ளன.
இத்தொகுதி 1957-ம் ஆண்டு முதல் இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. ஒருமுறையும், பார்வர்டு பிளாக் கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்து இந்த தொகுதியில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றார். இதேபோல் ரத்தினசாமி தேவர், சீனிவேல், செ.ராமச்சந்திரன் ஆகியோரும் இருமுறை வெற்றி பெற் றுள்ளனர். முதல்முறையாக தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.
தொகுதியில் இடம்பெற்றுள்ள பகுதிகள்
இது குறித்து தேர்தல் அலுவலர் ஒருவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஹார்விபட்டி, திருநகர், விளாச்சேரி, வடிவேல்கரை, தட்டானூர், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலையூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையபட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பா னோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தா ன்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பத்தி, நெடுமதுரை, கொடும்பாடி, ஒத்தைஆலங்குளம், பெரியகூடக்கோவில், பாரைபத்தி, நல்லூர், நெடுங்குளம், சின்ன அனுப்பானடி என நகர், கிராமங்கள் கலந்துள்ளன.
அதிமுக 6 முறை, இக்கட்சி சின்னத்தில் ஆண்டித்தேவர் ஒரு முறை என 7 முறை இக்கட்சி கைப்பற்றியுள்ளது. வரும் தேர்தலில் 8-வது முறையாக கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்பு இக்கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை வென்றவர்கள்
1957, 62- சி.சின்னக்கருப்பத் தேவர் (காங்.)
1967- எஸ்.அக்கினிராஜ்(திமுக)
1971- காவேரிமணியம்(திமுக)
1977, 80- கா.காளிமுத்து (அதிமுக)
1984- எம்.மாரிமுத்து (அதிமுக)
1989- ராமச்சந்திரன் (திமுக)
1991- எஸ்.ஆண்டித்தேவர் (பா.பி+அதிமுக)
1996- செ.ராமச்சந்திரன் (திமுக)
2001- எஸ்.எம்.சீனிவேல் (அதிமுக)
2006- ஏ.கே.போஸ் (அதிமுக)
2011- ஏ.கே.டி.ராஜா (தேமுதிக+அதிமுக)
2016- எஸ்.எம்.சீனிவேல் (அதிமுக)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT