Last Updated : 21 Aug, 2022 05:13 PM

2  

Published : 21 Aug 2022 05:13 PM
Last Updated : 21 Aug 2022 05:13 PM

60 தம்பதிகளுக்கு மணி விழா: வயதான பெற்றோரிடம் அன்பைப் பகிர ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: 60 தம்பதிகளுக்கு ஒரே மேடையில் மணி விழா புதுச்சேரியில் நடந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை, "பெற்றோருக்கு உணவு தந்து பார்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அன்பைப் பகிருங்கள்" என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

புதுச்சேரி திருக்காஞ்சி, ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் 'மணி விழா மகா சங்கமம்' நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று தொடங்கி வைத்தார். 60 தம்பதிகளுக்கு 60ம் ஆண்டு மணிவிழா நடந்தது. அதையடுத்து மணிவிழா தம்பதிகளை வாழ்த்திப் பேசினார். முன்னதாக காமாட்சி, மீனாட்சி காஞ்சிநாதர் திருக்கல்யாணம் நடந்தது. அதையடுத்து 60 தம்பதிகளுக்கு மாங்கல்ய தாரணம், விருந்தளிக்கப்பட்டது.

மேலும், சங்கராபரணி ஆற்றங்கரையில் நிறுவப்பட உள்ள 64 அடி உயர சிவன் சிலைக்கான அடிக்கல்லை ஆளுநர் நாட்டினார். இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசுகையில், ''ஒரே மேடையில் 60 ஜோடிகளின் மணிவிழாவைப் பார்ப்பது இதுவே முதல் முறை. நம்மால் முடியுமா என்று ஏக்கத்தோடு இருந்து தம்பதிகளுக்கு சிறப்பாக நடத்தி காட்டி இருக்கிறார்கள். இதைப் போன்ற கலாச்சார விழாக்கள் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருகிறது. 60 குடும்பங்களைச் சார்ந்தவர்களும் இங்கே வந்து ஒரே குடும்பமாக நிகழ்ச்சியை நன்றாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள்.

தாய் தந்தையரை மதிக்க வேண்டும் என்பதையும் நம்மை பெற்றெடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதையும் இளைய சமுதாயத்தினருக்கு வலியுறுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. தாய் தந்தையரை இன்றைய இளைஞர்கள் சரியாக பார்த்துக் கொள்கிறார்களா என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அவர்கள் பொறுப்பாக குழந்தைகளை வளர்க்கிறார்கள். ஆனால் வளர்ந்த பிறகு தாய் தந்தையரைப் பார்த்துக் கொள்ளும் பொறுமை இளைஞர்களுக்கு இருப்பதில்லை.

இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தையருக்கு உணவு தந்தால், பார்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அவர்களோடு அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை அவர்கள் வளர்த்தது போல வயதான காலத்தில் அவர்களை நாம் வளர்க்க வேண்டும்." என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x