Published : 21 Aug 2022 09:20 AM
Last Updated : 21 Aug 2022 09:20 AM
தீண்டாமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
பெரம்பலூரில் நேற்று நடைபெற்ற பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கு ஒருநாள் பயிற்சி முகாமில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு சீனியர்கள் இந்துமத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து புகார் கொடுத்தாலும், திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், திமுக அரசு ஒருதரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.
திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோயில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும்தான். இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை அவர் கண்டுகொள்ள மாட்டார். திருமாவளவன் யாரை திருப்திபடுத்துவதற்காக, எதைப் பெறுவதற்காக இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்எஸ்எஸ், பாஜக போன்றவை சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அமைப்புகளை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்.
போதைப் பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் மிகவும் தீவிரமாகப் பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்கிறது. இது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT