Published : 23 Oct 2016 03:03 PM
Last Updated : 23 Oct 2016 03:03 PM

போட்டித் தேர்வுகளில் பின்தங்கும் நீலகிரி மாவட்டம்: 40 ஆண்டுகளில் இருவர் மட்டுமே ஐஏஎஸ்

சுற்றுலா மாவட்டம் என்பதால், நீலகிரியில் சுற்றுலா மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால், கான்வென்ட் பள்ளிகளுக்கும் (Convent) பெயர் பெற்றதுதான் நீலகிரி. தங்கள் குழந்தைகளை, இங்கு சேர்ப்பதை பெற்றோர் கவுரவமாக கருதுகின்றனர்.

வெளியூர் மாணவர்களே, பெரும்பாலும் கான்வென்ட்களில் படிக்கின்றனர். உள்ளூர் மாணவர்களுக்கு கல்விச் சேவை அளிப்பது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளே.

பின்னடைவு

அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தினர்கூட வெற்றி பெறுவதில்லை. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 772 பேரில், 456 பேர் எழுதவில்லை. குரூப் - 2 தேர்வுக்கு 2,752 விண்ணப்பதாரர்களில் 872 பேர் எழுதவில்லை. குரூப் - 4 தேர்வுக்கு 5008 பேரில் 960 பேர் தேர்வு எழுதவில்லை. குடிமைப் பணி எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில், கடந்த 40 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் இருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரதேவன் ஐஏஎஸ்-ஆக தேர்ச்சி பெற்றார். 20 ஆண்டுகளுக்கு முன்னர், சிவகாமி சுந்தரி என்ற பெண் ஐபிஎஸ்-ஆக தேர்வு பெற்றார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர், கடந்த ஆண்டு பந்தலூரைச் சேர்ந்த கே.இன்பசேகர், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, தற்போது கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.

விழிப்புணர்வு இல்லை

இதுதொடர்பாக, இன்பசேகர் ஐஏஎஸ் ‘தி இந்து’விடம் கூறும்போது, “மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு தேடுதல் குறைவாக உள்ளது. நான் இணையதளம், ஆசிரியர்கள், நூலகங்கள் என அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினேன்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. அதுவே வெற்றியைத் தரும்” என்றார்.

அர்ப்பணிப்பு தேவை

அன்புச்சரம் ஐஏஎஸ் அகாடமி நிர்வாகி மஞ்சை வி.மோகன் கூறும்போது, “மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் நாளிதழ்களை வாசிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மிகவும் கடினம் என எண்ணும் மாணவர்கள், உடனடியாக வேலை கிடைக்கும் படிப்புகளை தேர்வு செய்து விடுகின்றனர்.

பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரு வாய்ப்புகள் குறித்து மட்டுமே தெரிவிக்கின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக, பல நூல்கள் தேவை. இதற்கு பல லட்சங்கள் செலவாகும். இதற்கு அரசு உதவ வேண்டும். தேர்வுகளுக்கு, மாணவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு உழைத்தால் வெற்றி நிச்சயம். அதற்கு பொறுமையும் அவசியம்” என்றார்.

பரிசீலனை

மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் கூறும்போது, “போட்டித் தேர்வுகளின்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுதொடர் பாக, 82,788 பதிவுதாரர்களுக்கு தகவல் அளிக்கப்படுகிறது.

போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், அதற்கான பயிற்சி வகுப்புகள் வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்திலேயே நடத்தப்படுகின்றன. தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. போக்குவரத்து சிரமம் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய 3 பகுதிகளில் பயிற்சிகள் வகுப்புகள் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

நீலகிரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக மட்டுமே கருதாமல், இங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தினால், அவர்கள் அடுத்த கட்டத்துக்கு மாவட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பதே கல்வியாளர்கள் கருத்தாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x