Published : 21 Aug 2022 04:45 AM
Last Updated : 21 Aug 2022 04:45 AM

திமுக கொண்டுவந்த இடஒதுக்கீட்டில் படிக்கவில்லை என அண்ணாமலை நிரூபிக்க தயாரா? - கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி

திருப்பூர்

திமுக கொண்டுவந்த இடஒதுக்கீட்டில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை படிக்கவில்லை என நிரூபிக்க தயாரா என்று, திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில், "1974-ம் ஆண்டுக்கு பிறகு கொங்குபகுதியில் என்னை போல ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பலரை, உங்களை போன்று உயர் அதிகாரிகளாக உயர் இடத்துக்குஅழைத்துச்சென்றது, மறைந்த தலைவர் கருணாநிதி கொண்டுவந்த சமூகநீதிதான். 1974-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்ற அந்தஸ்தையும், கொங்கு வேளாளர் என்ற வார்த்தையையும் கருணாநிதி அளித்தார்.

அதற்கு முன்பு சாதிச் சான்றிதழில் கவுண்டர் இனம் என்று பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி, எப்போதும் போல அடாவடித்தனம், அராஜகம் செய்து தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? இதுபோன்ற சலசலப்புக்கு திமுக அஞ்சாது. மிசா, இந்தி எதிர்ப்பு என பல்வேறு போராட்டங்களை பார்த்தவர்கள்.

திமுக கொண்டுவந்த இட ஒதுக்கீட்டில் படித்து நீங்கள் மேல்நிலைக்கு செல்லவில்லை என நிரூபித்தால், திமுகவினர் யாரும் இட ஒதுக்கீடு குறித்து பேசமாட்டோம். பிளஸ் 2, பொறியியல் கல்வி, உயர்கல்வி, மத்திய அரசு தேர்வாணைய விண்ணப்பங்களில், நீங்கள் ’கொங்கு வேளாளர்’ என்பதை குறிப்பிட்டீர்களா? ’கொங்கு வேளாளர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்’ என்ற இடஒதுக்கீட்டை பயன்படுத்தி கொண்டீர்களா இல்லையா என்பது எங்கள் கேள்வி.

பயன்படுத்தவில்லையென்றால், அதற்கான ஆதாரங்களை பதிவிடுங்கள். ஆனால், இடஒதுக்கீடு மூலமாக படித்து முன்னேறி இருந்தால், திமுகவுக்கு நன்றி சொல்லுங்கள். அதை விடுத்து சமூக வலைதளங்களில் தனி மனித தாக்குதல்,தரக்குறைவானவற்றை பதிவிடுவதை நிறுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x