Published : 20 Aug 2022 07:22 PM
Last Updated : 20 Aug 2022 07:22 PM
சென்னை: “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தூத்துக்குடியில் கடந்த 2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக விசாரணை ஆணையச் சட்டம், 1952 (மத்திய சட்டம் எண்.60/1952) பிரிவு-3, உட்பிரிவு (1)-ன் கீழ், நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், அரசாணை (பல்வகை) எண்.368, பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு-எப்) துறை, நாள் 23.05.2018 மூலம் அரசால் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையம் தன்னுடைய இடைக்கால அறிக்கையை 2021 மே 14ம் தேதி இந்த அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையின் பரிந்துரையின்படி பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 38 வழக்குகளை திரும்பப் பெறவும், போராட்டத்தின் போது காவல் துறையால் கைது செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான 93 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கவும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் 2018 மே 30 அன்று இறந்த, பிணையில் வெளிவந்த ஆயுள் தண்டனை கைதி பரத்ராஜ் என்பவரது தாயாருக்கு, ரூ. 2 லட்சம் ரூபாய் உதவித் தொகையும்,
திரும்பப்பெற தகுதியுள்ள 38 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் உயர்கல்வியும் வேலை வாய்ப்பும் தொடரத் தடையில்லா சான்று வழங்கவும், அரசாணை (பல்வகை) எண்.289, பொது (சட்டம் மற்றம் ஒழுங்கு-எப்) துறை, நாள் 26.05.2021 மூலம் ஆணை வெளியிடப்பட்டது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகளின் மீது அரசு அவ்வப்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 2022 மே,18 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
இந்தவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பான முக்கியத் தகவல்கள் சமீபத்தில் பத்திரிகைகளின் வெளியானது. அவற்றின் முக்கிய அம்சங்கள்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT