Published : 20 Aug 2022 07:16 AM
Last Updated : 20 Aug 2022 07:16 AM
சென்னை: முன்னாள் முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெற்ற பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை தனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒதுக்கி முறைகேடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது, தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. மேலும், இது தொடர்பான தகவல்களை, சமூக வலைதளங்களிலும் அந்த இயக்கம் வெளியிட்டு இருந்தது.
இதன் மூலம் தனக்கு அவப்பெயரும், மன உளைச்சலும் ஏற்பட்டதாகவும், நஷ்ட ஈடாக ரூ.10 கோடி வழங்க உத்தரவிடக் கோரியும், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகீர் உசேன் ஆகியோருக்கு எதிராக பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘முன்னாள் முதல்வர் பழனிசாமி, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நெடுஞ்சாலைத் துறையில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் டெண்டர்களை வழங்கியதன் மூலம், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. முதல்வராகப் பொறுப்பு வகித்த பழனிசாமிக்கு எதிரான ஊழல் மற்றும் முறைகேடு புகாரைசமூக வலைதளங்களில் வெளியிட்டதில் அவதூறு இல்லை.
டெண்டர்கள் எதேச்சதிகாரத்துடன் ஒரு தரப்புக்கு சாதகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. பழனிசாமிக்கு எதிராகப் புகார் அளித்துள்ளோம் என்பதற்காக, எங்கள் மீது அவர் அவதூறு வழக்கு தொடர முடியாது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு முன்மாதிரித் தீர்ப்புகள் உள்ளன.
பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதால், எங்களுக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி அவர் தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று கோரியுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT