Published : 20 Aug 2022 07:06 AM
Last Updated : 20 Aug 2022 07:06 AM
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளை, புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற தமிழிசை சவுந்தரராஜன், அங்கு தயாளு அம்மாளை சந்தித்து, நலம் விசாரித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியைச் சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்துக்குச் சென்று, தயாளு அம்மாளை சந்தித்து, உடல் நலம் விசாரித்தேன்.
இதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன், மறைந்த முதல்வர் கருணாநிதியின் உடல் நலம்குறித்து விசாரிக்க இதே இல்லத்துக்கு நான் வந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இது முகநூலில் வைரலாகி வருகிறது. ஏறத்தாழ 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பதிவை `லைக்' செய்துள்ளனர். மேலும், தமிழிசை சவுந்தரராஜனின் செயலைப் பலரும் முகநூலில் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக, ‘‘நாகரிக அரசியல் செய்த காமராஜர் வழிவந்த தமிழிசையின் குடும்பத்தினர் அனைவருமே மேன்மக்கள். அரசியல் வேறு, நட்புறவு வேறு என்பதன் இலக்கணம் அறிந்தவர் சகோதரி தமிழிசை.
அவர் அன்பும், பண்பும், அறிவும், அடக்கமும், நாகரிகமும் கொண்ட ஒரு பொக்கிஷப் பெட்டகம். அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக்கொண்டிருக்கும், அன்பின் இலக்கணமாகத் திகழும் தமிழிசைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT