Published : 20 Aug 2022 06:10 AM
Last Updated : 20 Aug 2022 06:10 AM
ராமேசுவரம்: ராமேசுவரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை. இப்பகுதிக்கு எளிதாகச் சென்று வர வசதியாக, முகுந்தராயர் சத்திரத்திலிருந்து அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்டு, 2017 ஜுலையில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தனுஷ்கோடி அரிச்சல் முனை எல்லையில் உள்ள சாலை வளைவை சுற்றி 3 கி.மீ. சுற்றளவில் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரை பகுதி மணல் பரப்புடன் விசாலமாக இருந்தது. ஆனால் நாளடைவில் கடல் அரிப்பினால் அரிச்சல்முனை சாலை வளைவை சுற்றியிருந்த மணல்பரப்பு முழுவதும் கடலால் சூழப்பட்டு விட்டது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் அரிச்சல்முனை எல்லையில் உள்ள பகுதியில் மணல் அடித்து வரப்பட்டு குவியத் தொடங்கியது.
தற்போது கடல் சீற்றம் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் அப்பகுதியில் 1 கி.மீ. தூரத்துக்கு மணல் பரப்பு உருவாகிவிட்டது. சுற்றுலாப் பயணிகள் அந்த மணல் பரப்பில் நடந்து கடல் அழகை ரசித்துவிட்டுச் செல்கின்றனர்.
கடற்கரையை பாதுகாக்க...
கடந்த 2017-ம் ஆண்டில் புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை யின் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ராமேசுவரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிகளில் கள ஆய்வு நடத்தினர். அப்பகுதியை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க பனை மரக்கன்றுகளையும், அலையாத்தி செடிகளையும் அதிக அளவில் நட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்தனர்.
ஆனால், அதன்படி நட வடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT