Published : 28 Oct 2016 09:21 AM
Last Updated : 28 Oct 2016 09:21 AM
‘கிராமப் பஞ்சாயத்துக்கள் அதிகாரி களின் கைகளில் செல்வது சரிதானா?’ என்கிற கேள்வியுடன் ஒரு கட்டுரையை இதே தொடரில் எழுதி யிருந்தோம். அதிகாரிகள் தரப்பில் இருந்து நண்பர் ஒருவர் பேசினார்.
“ஏன் பதற்றம் அடைகிறார்கள்? நாங்களே மொத்தமாகவா ஆளப் போகிறோம். டிசம்பர் வரை மட்டும்தானே. இல்லை எனில் ஆறுமாதம்தானே...” என்று சிரித்தார். அவருக்கு பதில் எதுவும் சொல்லவில்லை.
1922 பிப்ரவரி 4-ம் தேதி. கோராக்பூர் மாவட்டம், செளரி செளராவில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. எதிர்ப்பாளர்கள் காவல் நிலையம் மீது தீ வைத்தார்கள். இதில் பொதுமக்கள் மூன்று பேரும் காவலர்கள் 22 அல்லது 23 பேரும் கொல்லப்பட்டனர். கவலையடைந்த காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இதற்கு ஜின்னா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காந்தியிடம் நேரு சொன்னார்: ‘‘இந்த ஒரு சம்பவம்தானே...’’
‘‘கொல்லப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று இதைச் சொல்லுங்கள்...’’ என்றார் காந்தி.
ஆம்! காந்தி எப்போதுமே பாதிக்கப்படு கிறவர் பக்கம்தான் இருந்தார். அவர் கடைக் கோடியனுக்கும் சேர்த்தே சிந்தித்தார்.
“அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும் போது இந்தச் சோதனையைப் பயன்படுத்துங் கள். ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ‘நீங்கள் செய்யவிருக்கும் காரியம் அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின், உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்…’’ என்றார் அவர்.
‘‘ஒரு சாமானியன் எப்படி நடத்தப்படு கிறானோ அதை வைத்துதான் ஒரு நாட்டின் மாண்புகள் மதிப்பிடப்படும்!’’ என்றார் அவர்.
இந்தத் தொடரில் இதுவரை முன் னோடி கிராமங்களை மட்டுமே பார்த்தோம். ஆனால், நமது எல்லாக் கிராமங்களிலும் பாலாறும் தேனாறும் ஓடிக்கொண் டிருக்கவில்லை. தண்ணீருக்காக நீர் வற்றி, வண்டல் மண்டிய கிணற்றில் தேத்தாங்கொட்டையைப் போட்டுத் தேத்திக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ கிராமங் களில் ரயில்கள், வாகனங்கள் கடக்கும்போது கூச்சம் பிடுங்கித் திங்க… நம் பெண்கள் பதறி எழுகிறார்கள். எத்தனையோ கிராமங்களில் பிரசவத்துக்குப் பெண்களைத் தூளி கட்டித் தூக்கிச் செல்கிறார்கள். இன்னமும் நாட்டில் 150 மில்லியன் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்படவில்லை.
பல்லடம் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடியில் எங்குமே 1,500 அடிக்குத் தண்ணீர் இல்லை. அங்கே மந்திரிப்பாளையம் என்றொரு குக் கிராமம் இருக்கிறது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஒரு குடம் குடிநீர் கிடைக்கும். அதுவும் கிடைக்காமல் சமீபத்தில் சாலை மறியல் செய்தார்கள்.
இந்நிலையில்தான் பல்லடம் அருகில் இருக்கும் வாவிபாளையம் கிராமப் பஞ் சாயத்தின் வார்டு உறுப்பினர் சுரேஷ் பேசினார்: “வாவிபாளையத்துக்கு குடித்தண்ணி போகிற மெயின் லைன் உடைஞ்சி மூணு நாளாத் தண்ணீர் வீணா ஓடுது. புகார் பண்ணியும் சரி செய்யலை” என்கிறார்.
வாவிபாளையம் ஒரு உதாரணம்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. அதிகாரிகள் என்ன செய்வார்கள்? முதலில் ஐந்து பஞ்சாயத்துக்களுக்கு ஒரு அலுவலர் நிய மிக்கப்படுவார் என்றார்கள். ஆனால், பிறகு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களே அவர்களின் ஒன்றியத்தின் கிராமங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இங்கே ஒவ்வொரு ஒன்றியங்களிலும் 48 கிராமப் பஞ்சாயத்துக்கள் வரை இருக்கின்றன. ஒவ்வொரு கிராமமும் சராசரியாக ஏழெட்டு உட்கிராமங்களைக் கொண்டவை. எப்படி ஒரு வட்டார வளர்ச்சி அதிகாரியால் அத்தனை கிராமங்களையும் நிர்வகிக்க முடியும்? அலட்சியத்தின் உச்சம் அல்லவா இது?!
உள்ளாட்சிகளுக்கு அதிகாரங்கள் அளிக்கும் அரசியல் சாசன 73, 74-வது திருத்த மசோதாவை நிறைவேற்றியது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு மைல் கல். உலகமே உற்றுநோக்கிய சரித்திர சம்பவம் அது. உள்ளாட்சிகளின் உன்னதங்களை அரசி யல்வாதிகள் மறந்துவரும் இன்றையச் சூழ லில், அந்த மசோதாவை நிறைவேற்றியப் பிறகு 1993, மே 31-ம் தேதி அன்றைய பிரதமர் நரசிம்மராவ் பேசியதின் சுருக்கத்தை இங்கே நினைவுப்படுத்த வேண்டியது அவசிய மாகிறது:
“நீங்கள் உங்களது பஞ்சாயத்தின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் உழைக்கத் தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறீர்கள். உங்களிடம் இருந்து பெரும் சாதனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. 1989 செப்டம்பரில் நமது மறைந்த தலைவர், பிரதமர் ராஜீவ் காந்தி, பஞ்சாயத்து ஆட்சி மசோதா குறித்து உங்களிடம் தொடர்பு கொண்டது நினைவிருக்கலாம். உங்களது கரங்களை வலுப்படுத்த இந்த மசோதாவை அவர் கொண்டுவந்தார். அப்போது அவர் தொடங்கியது இப்போது உறுதியான வடிவம் பெற்றுள்ளன.
1991-ம் ஆண்டு அரசியல் சாசன 72-வது திருத்த மசோதா அந்த ஆண்டு செப்டம்பரில் லோக் சபாவில் கொண்டுவரப்பட்டதும், நாடாளுமன்றக் கூட்டுக் கமிட்டிக்கும் அனுப்பப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும். கூட்டுக் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் 1992, டிசம்பர் 22-ம் தேதி மக்கள் அவையும், அதற்கு மறுநாள் மாநிலங்கள் அவையும் 73-வது திருத்த மசோதாவை நிறைவேற்றின. பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களின் சட்ட சபைகள் அங்கீகரித்ததைத் தொடர்ந்து 1993, ஏப்ரல் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். 1993, ஏப்ரல் 24-ம் தேதி இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.
இதன்மூலம் பஞ்சாயத்துக்களுக்கு ஜனநாயகமும், அதிகாரப் பகிர்வும் அளிப்பது நமது நாட்டின் அடிப்படை ஆவணமான அரசியல் சாசனத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. இனிமேல் உங்கள் பஞ்சாயத்துக்களின் ஜனநாயக நடவடிக்கைகளை யாரும் தடுக்க முடியாது. பஞ்சாயத்துக்களை யாரும் நிறுத்தி வைக்க முடியாது. பஞ்சாயத்துக்களை யாரும் கலைத்துவிட முடியாது. பஞ்சாயத்துக்களுக்கு அளிக்கப்படும் அதிகாரங்கள், பொறுப்புகள், நிதியை யாரும் பறிக்க முடியாது. இந்தப் புதிய அரசியல் சாசன விதிகள் கிராமங் களின் வரலாற்றிலும் கிராம மக்களின் வாழ்க் கையிலும் ஒரு முன்னேற்றச் சின்னமாகத் திகழும். இவை கிராமங்களின் தற்சார்பிலும், தன்னாட்சி முறையிலும் புதிய சகாப்தத்தைப் படைக்கும். உங்களுக்கு உண்மையான அதிகாரம் கிடைப்பதை இந்தச் சட்டம் உறுதிப்படுத்தும். இதன்மூலம் உங்கள் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு நீங்கள் பெரும் பங்காற்ற முடியும். இதனால் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் உட்பட ஜனநாயகத்தில் எல்லோரையும் பங்கேற்பதை உறுதிப்படுத்த முடியும். எவரையும் புறக்கணித்துவிட்டதாக சமூகத்தின் எந்தப் பிரிவினரும் நினைக்கக் கூடாது.
கிராமப் பஞ்சாயத்துக்கள் வெகு விரைவில் ஒரு துடிப்புள்ள அமைப்புகளாக மாறிவிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதில் இருப்பார்கள். மக்களின் நன்மைக்காக பல திட்டங்களை இந்த அமைப்புகள் நடத்தும். இந்தத் திட்டமிடல் மற்றும் செயலாக்கப் பணியில் மக்களையும் ஈடுபடுத்தும். விவசாயம், நில மேம்பாடு, கால்நடை வளர்ச்சி, குடிசைத் தொழில்கள், குடிநீர், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், சுகாதாரம், உடல் ஆரோக்கியம், குடும்ப நலம் போன்றவை கிராமப் பஞ்சாயத்துக்களின் அக்கறைக்குரிய அம்சங்களாக இருக்கும். மக்களின் அன்றாட தேவைகளுக்கும் இந்தப் பஞ்சாயத்துக்கள் வகை செய்ய வேண்டும்.
நமது பரந்த கிராமப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டால்தான் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும். கிராமப் பகுதி மக்கள் வறுமையாலும், வேலையில்லா பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் போதுமான வாங்கும் சக்தி இல்லை. பருவ மழை தவறுதல், பஞ்சம், வெள்ளம், சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏழைகளின் நிலை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் பஞ்சாயத்துக்கள் ஊக்கத்துடனும் பொறுப் புடனும் பணியாற்ற வேண்டும். அடிமட்ட நிலையில் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சிக் கான பெரியதொரு பணியை நாம் தொடங்கு கிறோம். நீங்கள் அனைவரும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்” என்றார் அவர்.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் கனவுகள் நிறைவேறிய தருணம் அது. சரி, அவருக்குள் காந்தியின் கனவு கருக்கொண்டது எப்போது?
பயணம் தொடரும்...
காந்தி எப்போதுமே பாதிக்கப்படுகிறவர் பக்கம்தான் இருந்தார். அவர் கடைக் கோடியனுக்கும் சேர்த்தே சிந்தித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT