Published : 20 Aug 2022 06:08 AM
Last Updated : 20 Aug 2022 06:08 AM

வேலூர் | ஆந்திர எல்லையொட்டிய பகுதிகளில் ‘ஆபரேஷன் கஞ்சா’ சோதனை ஆரம்பம்: சோதனை சாவடிகளில் 24 மணி நேரம் வாகன தணிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் வழியாக இனி ஒரு கிலோ கஞ்சாவும் கடத்த முடியாத அளவுக்கு ‘ஆபரேஷன் கஞ்சா’’ சோதனை நடைபெறவுள்ளது. இதற்காக, கலால் பிரிவு காவல் துறையினர் கஞ்சா வேட்டையிலும் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்கள் பங்களிப்புடன் போதைப் பொருட்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் போதைப் பொருள் கடத்தலை தடுக்கவும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் கஞ்சா நடமாட்டம் என்பது ஆந்திர மாநிலத்தை பின்னணியாகக் கொண்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ரயில்கள், பேருந்துகள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு வருகின்றன.

கஞ்சா கடத்தலை தடுக்க சட்டம்- ஒழுங்கு, ரயில்வே, ரயில்வே பாதுகாப்பு படை, போதைப் பொருள் கடத்தல் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் சமீப நாட்களாக கலால் பிரிவு காவல் துறையினரும் கஞ்சா கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

எண்ணிக்கை அதிகரிப்பு

இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுடன் கலால் பிரிவையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கெனவே, பொருளாதார குற்றப் பிரிவுடன் வணிக குற்றப்புலனாய்வு பிரிவு இணைக்கப்பட்டதுபோல் இந்த இணைப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கான அரசாணை விரைவில் வரும் என கூறப்படுகிறது. இதன்மூலம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதுடன் சோதனை நடத்தவும் சுலபமாக இருக்கும் என கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டம்

ஆந்திர மாநிலத்துடன் வேலூர் மாவட்ட எல்லை சுமார் 80 கி.மீ கொண்டதாக உள்ளது. பொன்னை, கிறிஸ்டியான்பேட்டை, பரதராமி, சயனகுண்டா சோதனைச்சாவடிகள் உள்ளன.

ஆனால், மாவட்ட எல்லையில் உள்ள சில கிராமங்கள் வழியாக சுலபமாக வந்து செல்ல முடியும் என கூறப்படுகிறது. எனவே, ஆந்திர மாநிலத்துடன் இணைக்கும் கிராம அளவிலான அனைத்து பாதைகள் குறித்த விவரங்களையும் உட்கோட்ட அளவில் காவல் துறையினர் சேகரித்துள்ளனர்.

இங்கு சோதனையை தீவிரப் படுத்த முடிவு செய்துள்ளனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து இனி வேலூர் மாவட்டம் வழியாக ஒரு கிலோ கஞ்சாவும் கடத்த முடியாத அளவுக்கு சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையினர் எச்சரிக்கை

வேலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க உள்ளூர் காவல் துறையினருடன் கலால் பிரிவு காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் கொண்ட குழுவினர் மாநில எல்லை சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் 3 சுழற்சிகளாக சோதனை நடத்தவுள்ளனர். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆந்திர மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா வசதியுடன் இனி சோதனை நடைபெறவுள்ளது.

வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திரா சென்று வரும் பேருந்துகளில் கஞ்சா கடத்தலை தடுக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பவுள்ளோம்.

அதில், பயணிகள் கொண்டு வரும் பைகளை பேருந்து நடத்து நர்களே சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த வேண்டும். கஞ்சா குறித்த துண்டு பிரசுரங்கள் பேருந்தில் ஒட்டப்படும். இதன்மூலம் பேருந்துகளில் கஞ்சா கடத்தல் தடுக்கப்படும்.

அதேபோல், ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும். முக்கிய சாலைகள் வழியாக இல்லாமல் ஆந்திர மாநிலத்துடன் தொடர்பில் இருக்கும் பிற கிராமப்புற இணைப்பு சாலைகளில் இனிமேல் காவல் துறையினர் ரோந்து பணியில் இருப்பார்கள்.

வாகன சோதனையும் நடைபெறும். வரும் நாட்களில் கலால் பிரிவு காவல் துறையினர் கஞ்சா வேட்டையில் முழு அளவில் ஈடுபடுவார்கள்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x