Published : 24 Jun 2014 11:23 AM
Last Updated : 24 Jun 2014 11:23 AM
பதினாறாவது மக்களவைத் தேர்தலில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில், அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு, வரும் ஜூலை 9-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடிகளைச் செய்ததாக பல்வேறு மாநிலங்களில் எதிர்க் கட்சிகளும் ஆளுங்கட்சிகளும் புகார் கூறின. ஒவ்வொரு மாநிலத் திலும் வெவ்வேறு வகையான பிரச்சினைகளை தேர்தல் அதி காரிகள் சந்தித்தனர்.
கட்சியின் முன்னணித் தலை வர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்ட மேடையில் வேட்பாளர் இருந்தால், அந்தக் கூட்டத்தின் செலவு முழுவதும் வேட்பாளரின் செலவுக்கணக்கில் சேர்க்கப்படும் என்ற விதிமுறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்தனர். ஆனால், இது ஏற்கெனவே உள்ள விதிதான் என்று தேர்தல் ஆணையத்தினர் விளக்கம் அளித்தனர். மேலும் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யலாம் என்ற உத்தரவால் தேர்தல் ஆணையத்துக்கும், அரசியல் கட்சிகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதுபோன்ற பல பிரச்சினைகளை தேர்தல் துறையினர் எதிர்கொண்டனர்.
இந்நிலையில், தேர்தலின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை அடுத்த தேர்தல்களில் எப்படி சரி செய்வது என்று தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. மக்களவைத் தேர் தலில் தங்களுக்கு ஏற்பட்ட அனுப வங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தேர்தல்களில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து கருத்து கேட்கவும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 9 முதல் 11-ம் தேதி வரை டெல்லியில் இந்த 3 நாள் மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேர்தல் துறையினர் திங்கள் கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2009-ல் நடந்த மக்களவைத் தேர்தலின் போது ஒரு முக்கிய பிரமுகர் போட்டியிட்ட தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முறை கேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அதனால், இந்தத் தேர்தலில், ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகளை பதிவேட்டில் பதிந்து, அங்கிருக்கும் உயர் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரின் ஒப்புதல் பெற்ற பிறகே அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையை தொடங்க வேண்டும் என்று விதிமுறையை தேர்தல் ஆணையம் உருவாக்கியது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காலத்தில் வாகனச் சோதனையின்போது பெரிதும் பாதிக்கப்பட்டதாக வர்த்தகர்களும் பொதுமக்களும் புகார் செய்தனர். வாக்குப் பதிவுக்கு முன்னதாக 144 தடை உத்தரவு போட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், தேர்தல் பணி முடிந்து பெண் ஊழியர்கள் வீடு திரும்புவதில் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது குறித்தும் தேர்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. எங்களைப்போல் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் அதிகாரிகள் பல பிரச்சினைகளை சந்தித்திருப்பார்கள். அதுபற்றி விளக்கம் அளிப்பதற்காகவே தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இவ்வாறு தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT