Published : 18 Oct 2016 10:31 AM
Last Updated : 18 Oct 2016 10:31 AM
பரமக்குடியில் இருந்து ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலை நீள்கிறது. நான்கு வழிப்பாதைப் பணிகள் இன்னும் முடியவில்லை. அசுர வேகத்தில் விரைந்து கொண்டி ருக்கின்றன வாகனங்கள். ஊர்ந்து வரும் கரிய பாம்பாக வீடுகளை விழுங்கியிருக்கிறது சாலை. சாலைத் திட்டத்தால் மண்மூடிய கிணறுகளும் பாழடைந்த வீடுகளும் வாழ்ந்து கெட்டதுக்கு சாட்சியங்களாக நிற்கின்றன. இன்னொரு பக்கம், ஒரு வேட்டை விலங்குபோல விளைநிலங்களை இரையாடிக்கொண்டிருக்கிறது நில வணிகம். பயமுறுத்துகின்றன ‘பரமக்குடிக்கு வெகு அருகே’ பலகைகள்.
நகரமயமாதலின் பிரச்சினை இடம்பெயர்தல் மட்டுமல்ல; விளைநிலங்களின் அழிவுதான் அதன் பிரதானப் பிரச்சினை. உலகிலேயே விவசாய நிலங்கள் அதிகம் கொண்ட இரண்டா வது நாடு இந்தியா. ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப் பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு களில் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நில வணிகத்துக்கு பலியாகியிருக்கின்றன. சென்னை, ஏறக்குறைய 100 சதவீத விளை நிலங்களை இழந்துவிட்டது. திருவள்ளூர் 65.3 சதவீதம், காஞ்சிபுரம் 63.59 சதவீதம், கன்னி யாக்குமரி 82.47 சதவீதம் நகரமயமாகிவிட்டன. தற்போது தமிழகத்தில் வெறும் 58 சதவீத நிலம் மட்டுமே பாசன வசதி பெறுகின்றன. நாட்டில் ஒருகாலத்தில் 60 சதவீதமாக இருந்த விவசாயத் துறையின் வேலைவாய்ப்பு இப்போது 17 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.
இதோ வந்துவிட்டது அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்து. அபூர்வ காட்சியாக இருந்தது அது. வலது பக்கம் அரியனேந்தல் முழுக்க விவசாயம் பூத்துக்கிடக்கிறது. சாலையின் எதிர்ப்புறம் விளைநிலங்கள் கூறுபோட்டு விற்கப்படுகின்றன. அங்கே கையளவு விளைநிலத்தைக்கூட காணமுடியவில்லை. எதிர்கொண்டு வரவேற்கிறார் நந்தகோபாலன். கதர் வேட்டிச் சட்டை. வாய் நிறைய சிரிப்பு. அரியனேந்தல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர். சாலையின் இருபுறமும் காணக்கிடக்கும் வித்தியாசத்தை அவரிடம் கேட்டேன்.
நில வணிகத்துக்கு தடை!
கலகலவென சிரித்தவர், “எதிர்த்தாப்புல அது வேற பஞ்சாயத்து. இங்ஙன என் பஞ்சாயத்து. இந்த பத்து வருஷத்துல ஒருத்தரை நிலத்தை விற்க விடலை நான். சுத்துவட்டாரத்துல ரியல் எஸ்டேட் வியாபாரம் கோடிக்கணக்குல புரளுது. ஆரம்பத்தில் விவசாயிங்க, ‘‘என் நிலத்தை நான் விற்கிறேன். நீ ஏன் தடுக்குற?’’ன்னு சண்டைக்கு வந்தாங்க.
‘‘தாராளமா வித்துக்கோ. நான் பஞ்சாயத்துல அப்ரூவல் தர மாட்டேன். அப்புறம் காசு போச் சேன்னு கதறக் கூடாது’’ன்னுட்டேன். ரியல் எஸ்டேட்காரங்க முட்டி மோதிப் பார்த்தாங்க. எதுக்கும் மசியலை. அத்தனையும் நஞ்சை, புஞ்சை நிலங்கள். சட்டப்படி விளைநிலங் களுக்கு அப்ரூவல் தரக்கூடாதுங்கிறதையும் விவசாய நிலம் போச்சுன்னா விவசாயிகள் நடுத் தெருவுலதான் நிக்கணுங்கிறதையும் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி புரியவெச்சிருக்கேன். இப்ப யாரும் நிலத்தை விற்கிறேன்னுட்டு வர்ற தில்லை. எங்க ஊரோட பிரதான வாழ்வாதாரம் விவசாயம்தான். நெல்லு, பருத்தி, மிளகாய் சாகுபடி செய்யறோம்” என்கிறார்.
விவசாயம் சரி. தண்ணீர்? வானம் பார்த்த பூமி இது. ஆனால், அதற்கும் அருமையாக வழி செய்திருக்கிறார் நந்தகோபாலன். ஊருக்குள் நான்கு ஊருணிகளையும் ஒரு பண்ணைக் குட்டையையும் வெட்டி சாதனைப் படைத்திருக்கிறார்.
ஊருணிக் கரையில் நந்தகோபாலன்
“ஊருல நாலு முக்கியக் கோயில்கள் இருக்கு. ஒவ்வொரு கோயில் பக்கத்திலேயும் ஊருணிகள் மண் மூடிக் கிடந்துச்சு. 2006-ம் வருஷம் தலைவர் பொறுப்புக்கு வந்ததும் ஊருக்குள்ள ஊருணிகளைப் புனரமைக்க முடிவு செஞ்சேன். ஏன்னா, விவசாயம் கொஞ் சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருந்துச்சு. இந்தப் பக்கம் எல்லாம் நிலத்தடி நீர் கடுமை யான உப்புங்க. அந்தத் தண்ணியைப் பாய்ச்சி, நெலமெல்லாம் வெள்ளைப் பூத்துக்கிடக்கும். ஒருகட்டத்துல விவசாயிங்க நிலத்தை வித்துப் புட்டு ஊரை விட்டு கிளம்பலாங்கிற முடிவுக்கு வந்தாங்க.
ஊரெல்லாம் ஊருணிகள்!
ஆனா, நான் தடுத்துட்டேன். கிராம சபையைக் கூட்டி ‘‘நம்ம ஊருல விவசாயத்தைப் பொழைக்க வைக்க முடியும். அதுக்கு ஊருக்குள்ள காலம் காலமா தூர்ந்துக்கிடக்கிற ஊருணியை எல்லாம் மீட்கணும். அதை செய்யலாம். எனக்கு ரெண்டு வருஷம் அவகாசம் கொடுங்க. அப்புறமும் தண்ணீர் இல்லைன்னா உங்கள் விருப்பம்’’ன்னு சொன்னேன். மக்களும் ஏத்துக்கிட்டாங்க. முதல் வேலையா கருமலையான் கோயிலுக்குப் பின்னால இருந்த ஊருணியைக் கையில எடுத்தோம். அங்கே ஊருணி இருக்கிறதே தெரியாம மண்மூடிக் கிடந்துச்சு. உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்துக் கிடந்துச்சு. நூறு நாளு வேலை திட்டத்துல மக்களை களம் இறக்கினேன். ரெண்டொரு மாசத்துலேயே ஊருணியைத் தூர் வாரிட்டோம். கூடவே ஊருணிக்கு நடுவுல ஆழமான குளத்தை வெட்டினோம். ஊருணியை சுத்தியும் வேலி, சுற்றுச்சுவர், படித்துறை, வாயில் கதவு எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்டோம். கருமலையான் கருணையில அடுத்த மாசமே அதுல தண்ணீர் நிறைஞ்சிட்டு” உணர்ச்சிப் பெருக்கில் கண்கலங்குகிறார்.
இப்போதும் அந்த ஊருணியில் தண்ணீர் இருக்கிறது. கோடைகாலத்தில் ஓரிரு மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் தண்ணீர் இருப்பதால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் பெருகியிருக்கிறது. உப்புத் தன்மையும் குறைந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஊருக்குள் இருக்கும் அழகிய மீனாள் கோயில், செட்டி அய்யனார் கோயில், நவநீத கிருஷ்ணன் கோயில், ஆயத்துறை காளியம்மன் கோயில் ஆகிய இடங்களிலும் ஊருணிகளைத் தூர் வாரி சீரமைத்திருக்கிறார் நந்தகோபாலன். தற்போது மழையில்லாமல் சுற்றுவட்டாரக் கிராமங்கள் அனைத்தும் காய்ந்துகிடக்க இங்கு மட்டும் நீர் நிறைந்து காணப்படுகின்றன ஊருணிகள். ஒவ்வோர் ஊருணி நிரம்பிய பின்பும் அடுத்த ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்களையும் சிரமைத்திருக்கிறார்கள்.
“எங்க மக்களுக்குதான் நன்றி சொல்லணும். அந்தக் காலத்துல நடந்த குடி மராமத்துப் பணியை இன்னைக்கு நாங்க செய்யறோம். தூய்மை திட்டத்தின் கீழ ஊருணியில இருக்கிற குப்பைகளை அகற்றுகிறோம். நூறு நாளு திட்டத்தின் கீழே வருஷம்தோறும் தூர் வாருகிறோம். கரைகளைப் பலப்படுத்துறோம். பெரிய வேலைன்னா வீட்டுக்கு ஒருத்தர் சுழற்சி முறையில வந்துடுவாங்க. அத்தனைப் பேருக்கும் சம்பளம் கொடுக்கிறோம்” என்கிறார். இதுதவிர விவசாயத்துறையின் நிதி உதவிபெற்று பண்ணைக்குட்டை ஒன்றை புதியதாக வெட்டியிருக்கிறார் நந்தகோபாலன். அதிலும் நீர் நிரம்பியிருக்கிறது.
சீமைக் கருவேலம் அகற்றம்!
இவற்றுடன் இவர் செய்திருக்கும் மற்றொரு மகத்தான பணி, சீமைக் கருவேல மரங்கள் அகற்றம். சுற்றுவட்டாரங்கள் எங்கும் காடு போல அடர்ந்து வளர்ந்திருக்கின்றன சீமைக் கருவேலங்கள். அரசு அவற்றை அப்புறப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. ஆனால், அரியனேந்தல் கிராமத்தில் சீமைக் கருவேல மரங்களை அடியோடு பிடுங்கி எறிந்திருக்கிறார்கள் மக்கள்.
“எங்க கிராமத்துல எங்ஙன பார்த்தாலும் சீமைக் கருவேல மரங்கள் காடு மாதிரி வளர்ந்து நின்னுச்சு. கிராம சபையைக் கூட்டி தீர்மானம் போட்டோம். ஒட்டுமொத்த ஊரும் களத்துல இறங்குச்சு. ஒத்தை மரம் விடாம பிடுங்கிப்புட்டோமுங்க” என்கிறார்.
சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் மரக் கன்றுகளை நட்டிருக்கிறார்கள். இவ்வாறு சீரமைக்கப்பட்ட ஊரின் பொது இடங்களில் சுற்றிலும் வேலி போட்டு பாதுகாக்கிறார்கள். பூங்காக்கள், நடைபயிற்சிக்கான அழகிய நடைபாதைகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கு ‘டாக்டர் அப்துல் கலாம் பூங்கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஐந்தாறு ஆண்டுகளில் காடு போல வளர்த்து செழித்திருக்கின்றன மரங்கள். மரத்தடியில் அமர்ந்தோம். இலைகளை வீசி மகிழ்ச்சியாக தலையாட்டுகின்றன மரங்கள் . தாலாட்டுகிறது காற்று. மக்கள் அதிகாரத்தின் மணம் சுகந்தமாக வீசுகிறது. இதுமட்டுமா? இன்னும் இருக்கின்றன அதிசயங்கள்!
- பயணம் தொடரும்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT