Published : 19 Aug 2022 02:26 PM
Last Updated : 19 Aug 2022 02:26 PM
தென்காசி: புலிதேவன் பிறந்த தினம், ஒண்டிவீரன் வீர வணக்கம் நிகழ்ச்சியில் வன்முறை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக தென்காசியில் இன்று காலை 9 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை 13 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வெளியிட்ட அறிக்கையில், “தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் 20.08.2022 நடைபெறும் ஒண்டிவீரன் வீர வணக்கம் நிகழச்சி மற்றும் 07.9 2022 நெல்கட்டும் செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளுர், தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் அனைவரும் கூட்டமாக இல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட சிவகிரி வட்டம், சங்கரன் கோவில் வட்டம் , திருவேங்கடம் வட்டம் மற்றும் கடையநல்லூர் வட்டத்தில் புளியங்குடி காவல் சரகத்திற்குட்பட்ட புதுக்குடி வருவாய் கிராமம் ஆகிய பகுதிகளில் மட்டும் 19.08.2022 காலை 06.00 மணி முதல் 02.09.2022 மாலை 06.00 மணி வரை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 மற்றும் தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மேற்படி தடை உத்தரவு அமுல்படுத்தப்படும் பகுதிகளில் கீழ்கண்டுள்ள நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது
வாள், கத்தி, லத்தி, கற்கள் என்பன போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் மற்றும் ஊர்வலங்கள்.அன்னதானம், பொங்கலிடுதல், பால் குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலங்கள், அனைத்து வகையான வாடகை வாகனங்கள் சுற்றுலா மோட்டார் வண்டிகள், டூரிஸ்ட்,மேக்சி வண்டிகள், அகில இந்திய டூரிஸ்ட் வண்டிகள் ஆகியவற்றுக்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்படும் பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு: தென்காசி மாவட்டம் புளியங்குடி காவல் சரகம் நெல்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் நடைபெறும் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 வது நினைவு நாள் அரசு விழாவிற்கு வருகை தருபவர்கள் வாகன அனுமதி சீட்டை (online vehicle Pass) கீழ்க்கண்ட இணைப்பு (link) மூலம் பெற்றுக் கொள்ளலாம். ondiveeran.tenkasipolice.org அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் வாகன அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம். Helpline (24x7) - 9498101748
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT